8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுவதுதான் அரசுக்கு நல்லது டி.டி.வி.தினகரன் பேட்டி


8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுவதுதான் அரசுக்கு நல்லது டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 6 July 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுவதுதான் அரசுக்கு நல்லது என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

நாமக்கல்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நிகழ்ச்சியாக நாமக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சத்துணவுக்கு முட்டை அனுப்பும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள்?, யாரை நோக்கி சோதனை நடத்தப்பட்டது? என நாமக்கல் மாவட்ட மக்களுக்கு தெரியும்.

கடந்த 2 ஆண்டுகளாக மக்களிடம் இருந்து சுரண்டியவர்களின் பினாமிகளிடம் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடத்தப்படுவதாக தெரிகிறது. மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் தடை செய்ய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி வரவேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் ஆட்சி வந்தால்தான், ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறும். இந்த ஆட்சியை மக்கள் விரும்பவில்லை.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதோடு சட்டசபைக்கும் தேர்தல் வருமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும். 18 பேரும் மீண்டும் சட்டசபைக்கு வருவார்கள். அப்போது பெரும்பான்மை இல்லாத அரசு முடிவுக்கு வரும்.

8 வழிச்சாலை அமைப்பதால் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விடுவார்களோ என்ற பயத்தில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கின்றனர். காஞ்சீபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் என அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மக்களை சந்தித்து இந்த திட்டம் பற்றி எடுத்துக்கூறி, மக்களை சம்மதிக்க வைக்கவேண்டும். அவ்வாறு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதுதான் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. 8 வழிச்சாலையை பொதுமக்கள் தொடர்ந்து எதிர்க்கும்போது அதை கைவிடுவதுதான் அரசிற்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story