கூட்டுறவு சங்கத்தில் பால் அளவையாளர் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்


கூட்டுறவு சங்கத்தில் பால் அளவையாளர் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 6 July 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்கத்தில் பால் அளவையாளர் உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 55). இவர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் அளவையாளராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 3-ந்தேதி பால் சேகரித்துக்கொண்டு குருவாலப்பர்கோவில் கிராமத்தில் இருந்து, இடைக்கட்டு கிராமத்திற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குப்புசாமி படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குப்புசாமி இறந்தார். இதையடுத்து குப்புசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யவேண்டும். குப்புசாமியின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை வழங்கி, குப்புசாமி இறப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இந்த விபத்து குறித்து, மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காத பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ரவிச்சந்திரனை பணிநீக்கம் செய்திட வலியுறுத்தியும், குப்புசாமியின் உறவினர்கள், அவரது உடலை பால் உற்பத்தியாளர் சங்கத்தில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மேல் அதிகாரிகள் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி மற்றும் அரியலூர் முதுநிலை ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் வந்து குப்புசாமி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கைகளை மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் குப்புசாமி உடலை எடுத்து கலைந்து சென்றனர். 

Next Story