கோவில்பட்டியில் தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் கணவரை கைது செய்ய வலியுறுத்தல்


கோவில்பட்டியில் தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் கணவரை கைது செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 July 2018 3:00 AM IST (Updated: 7 July 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த பெண்ணின் கணவரை கைது செய்ய வலியுறுத்தினர்.

இளம்பெண் தற்கொலை

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முப்பிடாதி மகன் ராஜா (வயது 30). மெக்கானிக். இவருடைய மனைவி நிர்மலா தேவி (24). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சேஷாத்ரி (5) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த நிர்மலா தேவி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீசார் விரைந்து சென்று, நிர்மலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 ஆண்டுகளில் நிர்மலா தேவி தற்கொலை செய்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

சாலைமறியல்

இதற்கிடையே, ராஜா அடிக்கடி மது குடித்து விட்டு, நிர்மலா தேவியை துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நிர்மலாதேவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் நேற்று காலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலா தேவியின் உடலை வாங்க மறுத்து, அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், தலைவர் புவனேசுவரி, பொருளாளர் விஜயலட்சுமி, நகர செயலாளர் வசந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நிர்மலா தேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து அனைவரும் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் நிர்மலா தேவியின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்று, இறுதிச்சடங்கு நடத்தினர்.


Next Story