மாவட்ட செய்திகள்

பஸ் எரிப்பு வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு நெல்லை கோர்ட்டு ஜாமீன் + "||" + In the case of bus flares to rocket raja Nellai court bail

பஸ் எரிப்பு வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு நெல்லை கோர்ட்டு ஜாமீன்

பஸ் எரிப்பு வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு நெல்லை கோர்ட்டு ஜாமீன்
பஸ் எரிப்பு வழக்கில் நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ராக்கெட் ராஜாவுக்கு நெல்லை கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நெல்லை,

பஸ் எரிப்பு வழக்கில் நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ராக்கெட் ராஜாவுக்கு நெல்லை கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பேராசிரியர் கொலை

நெல்லையை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 26–ந் தேதி அவருடைய மாமனார் குமார் வீட்டில் இருந்த போது ஒரு கும்பலால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ராக்கெட் ராஜா உள்பட 9 பேர் மீது ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராக்கெட் ராஜா கடந்த மார்ச் மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு கருதி அவர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பஸ் எரிப்பு வழக்கு

ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை அருகே தாழையூத்தில் பஸ் எரிப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக ஏற்கனவே 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கிலும் ராக்கெட் ராஜா சேர்க்கப்பட்டார்.

வழக்கு விசாரணை நெல்லை 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் வழங்கி உத்தரவு

இந்த வழக்கில் கோவை சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ராக்கெட் ராஜா நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு கார்த்திகேயன், பஸ் எரிப்பு வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மீண்டும் அவர் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ராக்கெட் ராஜா கோர்ட்டில் ஆஜராவதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.