சட்டசபை துணை சபாநாயகராக கிருஷ்ணாரெட்டி ஒருமனதாக தேர்வு குமாரசாமி, எடியூரப்பா வாழ்த்து
சட்டசபை துணை சபாநாயகராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த கிருஷ்ணாரெட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு குமாரசாமி, எடியூரப்பா வாழ்த்து தெரிவித்தனர்.
பெங்களூரு,
சட்டசபை துணை சபாநாயகராக ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த கிருஷ்ணாரெட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு குமாரசாமி, எடியூரப்பா வாழ்த்து தெரிவித்தனர்.
துணை சபாநாயகராக கிருஷ்ணாரெட்டிகர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். துணை முதல்–மந்திரி பதவி காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியதும், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் நிறுத்தப்பட்ட கிருஷ்ணா ரெட்டி எம்.எல்.ஏ., துணை சபாநாயகராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருஷ்ணா ரெட்டியின் பெயரை உறுப்பினர் சிவலிங்கேகவுடா முன்மொழிய, உறுப்பினர் கோபாலய்யா வழிமொழிந்தார். ஆனால் வேறு யாரும் அந்த பதவிக்கு போட்டியிடவில்லை. இதனால் துணை சபாநாயகராக கிருஷ்ணா ரெட்டி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.
அமர வைத்தனர்அதைத்தொடர்ந்து முதல்–மந்திரி குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா ஆகியோர் உறுப்பினர் இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணாரெட்டியை அழைத்து வந்து துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, “இளம் வயதிலேயே பெரிய பதவிக்கு கிருஷ்ணாரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறப்பான முறையில் பணியாற்றுவார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, “சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகள் ஒருங்கிணைந்த கோலார் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. மந்திரி பதவி கிடைக்கும் என்று கிருஷ்ணாரெட்டி எதிர்பார்த்து இருந்தார். அவருக்கு துணை சபாநாயகர் பதவி கிடைத்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள்“ என்றார்.