மாவட்ட செய்திகள்

வரலாறு ‘உறைந்திருக்கும்’ கிராமம்! + "||" + History is a frozen village

வரலாறு ‘உறைந்திருக்கும்’ கிராமம்!

வரலாறு ‘உறைந்திருக்கும்’ கிராமம்!
குஜராத் மாநிலத்தின் ஒரு கிராமம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றின் சாட்சியாகத் திகழ்கிறது.
தோலாவிரா என்ற அக்கிராமம், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் தலைநகரான புஜ் நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.

காதிர் பேட் என்ற தீவில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் ‘கோட்டா திம்பா’ என்று அழைக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சிப் பகுதியில், சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிந்து சமவெளி நாகரிக நகரம் இருந்தது.


இந்தியத் தொல்லியல் ஆய்வகமும், காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி. குழுவினரும் நடத்திய ஆய்வில், தோலாவிராவில் மிகப்பெரிய நீர் சேமிப்புக் கட்டமைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இங்கு நிலத்துக்குக் கீழே உள்ளவற்றை ரேடார் மூலம் அக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நவீனத்துவம் மிக்க நகரமைப்பு, கால்வாய்த் திட்டம், கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு சிந்து சமவெளி நாகரிகம் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம்.

நில அளவை, கலை போன்ற விஷயங்களில் சிந்து சமவெளி நாகரிகத்தினர் நிபுணத்துவத்துடன் விளங்கியுள்ளனர். தோலாவிரா கிராமம் பாலைவனத்தில் அமைந்திருந்தாலும், ஒருகாலத்தில் அது வளம்மிக்க, கலாசார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது.

‘‘சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர். தோலாவிரா ஒரு சர்வதேச வர்த்தக நகராகவும் திகழ்ந்திருக்கிறது’’ என்று டெக்கான் தொல்லியல் கல்லூரியின் துணைவேந்தர் வசந்த் ஷிண்டே கூறுகிறார்.

‘‘தோலாவிரா நகரம் நிறுவப்படும் முன்பே அங்கு ஓர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் புவி அமைப்பு, அங்கு ஒரு வர்த்தக நோக்கிலான துறைமுகத்தை நிறுவுவதற்கு ஏதுவாக இருந்துள்ளது. பாலைவனத்தால் அந்த நகரம் சூழப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்ந்தவர்கள் அதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்தனர். தோலா விரா நகரின் இரு பக்கங்களிலும் மான்சர், மான்கர் ஆகிய இரு நதிகள் பாய்ந்துள்ளன. மழைக்காலங்களில் மட்டுமே அந்த நதிகளில் நீரோட்டம் இருந்துள்ளது. எனவே அவற்றின் நீரை தங்கள் நகருக்குத் திருப்ப அவர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி, எப்போதெல்லாம் நீர் பாய்ந்துள்ளதோ அப்போதெல்லாம் நீரை தங்கள் நகருக்கு நீரைத் திசைதிரும்பியுள்ளனர். கால்வாய், நிலத்தடி நீர்த்தொட்டி ஆகியவற்றை அவர்கள் கட்டமைத்து நீர்த் தேவைகளைச் சமாளித்தனர். இதன்மூலமே அவர்கள் பாலைவனத்துக்குள் பசுமையைக் கொண்டுவந்தனர்’’ என்கிறார் வசந்த் ஷிண்டே.

ஹரப்பா நாகரிக காலத்தில் பின்பற்றப்பட்ட அதே முறை இன்று கட்ச் பகுதியில் மேற்கொள்ளப்பட்டால், இப்போதும் அங்கு பசுமையைக் கொண்டுவரலாம் என்று அவர் கூறுகிறார்.

கட்ச் பகுதியில் உள்ள தோலாவிரா மற்றும் ஆமதாபாத் அருகே உள்ள லோத்தல் ஆகிய நகரங்கள் ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தின் குஜராத் பகுதி முக்கிய இடங்கள் ஆகும்.

சிந்து சமவெளி நாகரிகம் கி.மு. 3000 முதல் கி.மு. 1500 வரை விளங்கியதாக இந்திய தொல்லியல் ஆய்வகம் கூறினாலும், இது சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக முனைவர் சமர் கண்டு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் ஷிண்டேயும் சிந்து சமவெளி நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்கிறார்.

‘‘ராக்கிகார்ஹி மற்றும் பிற பகுதிகளில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தகவல் சிந்து சமவெளி நாகரிகம் குறைந்தது 5,500 ஆண்டுகள் பழமையானது என்பதை உணர்த்துகிறது’’ என ஷிண்டே சொல்கிறார்.

மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர்கள் படையெடுப்பே சிந்து சமவெளி நாகரிகம் அழியக் காரணம் என்று இங்கிலாந்து ராணுவ அதிகாரியும், தொல்லியல் ஆய்வாளருமான சர் எரிக் மார்டிமர் வீலர் கூறியிருந்தார்.

அதை மறுக்கும் ஷிண்டே, இயற்கைச் சீற்றமே அந்த நாகரிகம் அழியக் காரணம் என்கிறார்.

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தோலா விரா நகரம் அழியக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அங்கு ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர்.

வரலாறு என்பதே புதிர்களும் சுவாரசியங்களும் நிரம்பியதாகத்தான் உள்ளது!