கரூர் டவுன் போலீஸ் நிலையத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


கரூர் டவுன் போலீஸ் நிலையத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 July 2018 4:15 AM IST (Updated: 8 July 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

கரூர் டவுன் போலீஸ் நிலையத்தை திருநங்கைகள் முற்றுகையிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டம் மணவாசி பகுதியில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றை சேர்ந்த திருநங்கைகள் பலர் தொகுப்பு வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கரூரின் வேறொரு பகுதியை சேர்ந்த திருநங்கைகள் சிலர், கரூர் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம், நகை உள்ளிட்டவற்றை அபகரிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக புகார் எழுந்தது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரால் தங்களது கூட்டமைப்புக்கும், தங்களுக்கும் அவப்பெயர் வருவதாக மணவாசி திருநங்கைகள் கருதினர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் கரூருக்கு திரண்டு வந்து, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாக கூறப்பட்ட திருநங்கைகளை சந்தித்து முறையிட்டனர்.

இதனால் 2 தரப்பு திருநங்கைகளுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுத்து கொள்ள முடியாமல் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

பின்னர் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த இடத்திலும் மோதல் முற்றியது. இதனால் அங்கிருந்த கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

இந்த நிலையில் கரூரில் திருநங்கைகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்புக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அந்த அமைப்பின் தலைவி மோகனாம்பாள் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் அருணா உள்பட திருநங்கைகள் பலர் திருச்சி, மதுரை, சென்னை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலிருந்து பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் நேற்று காலை கரூருக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது அமைப்பினர் கரூர் மாவட்ட நிர்வாகிகள் சம்சு, ராஜூநாயக், சத்யா, சுஜாதா உள்ளிட்டோரை அழைத்து கொண்டு கரூர் டவுன் போலீஸ் நிலையத்தினை முற்றுகையிட்டனர். அந்த சமயத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயலில் ஈடுபட்ட திருநங்கைகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

பின்னர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில், கரூர் டவுன் போலீஸ் நிலையம் முன்பு இரும்பு தடுப்பு வேலிகளை வைத்துக்கொண்டு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்த திருநங்கைகள் கூட்டமைப்பினர் புகார் மனு கொடுத்தனர். அதில், மூன்றாம் பாலினத்தவராகிய எங்கள் மீதான பார்வை சமூகத்தில் ஒதுக்கப்படும் நிலையில் தான் இருக்கிறது. எனினும் அரசு உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம் தான் எங்களது பிழைப்பு நடக்கிறது. இந்த நிலையில் எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் 3 பேருடன் சேர்ந்து கொண்டு சில திருநங்கைகள் வழிப்பறி உள்ளிட்ட செயலில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன் பேரில் கரூர் மாவடியான்கோவில் தெருவை சேர்ந்த திருநங்கைகள் ஸ்ரீமதி, நிகிதா, துர்காதேவி, ஜமுனா, நந்தினி, நபிஷா மற்றும் கதிர்வேல், சேகர், சந்தோஷ் ஆகிய 9 பேர் மீது வழிப்பறியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவி மோகனாம்பாள் நிருபர்களிடம் கூறுகையில், எந்த ஒரு மாவட்டத்திலும் இதுபோன்ற பிரச்சினை வரக்கூடாது. இனிமேலும் நாங்கள் மனிதரோடு மனிதராக வாழவேண்டும். தீய வழியில் செயல்படும் திருநங்கைகளுக்கு, கரூரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒரு பாடமாக இருக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் அருணா கூறுகையில், கரூரில் திருநங்கைகளுடன் 3 ரவுடிகள் சேர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டதை கண்டித்தோம். எனினும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது எங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

குற்ற செயலில் ஈடுபட்ட ரவுடிகள், திருநங்கைகளை விரைவில் கைது செய்து விடுவோம் என போலீஸ் தரப்பில் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். 

Next Story