திருச்சியில் இருந்து சேலத்துக்கு கண்டக்டர்கள் இல்லாத நவீன பஸ்கள் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


திருச்சியில் இருந்து சேலத்துக்கு கண்டக்டர்கள் இல்லாத நவீன பஸ்கள் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 7 July 2018 11:00 PM GMT (Updated: 7 July 2018 7:33 PM GMT)

திருச்சியில் இருந்து சேலத்துக்கு கண்டக் டர்கள் இல்லாத நவீன பஸ்கள் சேவையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருச்சி,

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக 515 நவீன பஸ்கள் வடிவமைக்கப்பட்டன. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த பஸ்களை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக திருச்சிக்கு 10 பஸ்கள் வந்தன. மதுரை, சேலம், திண்டுக்கல், பழனி வழித்தடத்தில் இந்த பஸ் பயன்பாட்டிற்கு வந்தது. எளிதில் தீப்பிடிக்காத வகையிலும், சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட பல நவீன வசதிகளுடன் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் திருச்சிக்கு மேலும் 6 நவீன பஸ்கள் வந்தன. இந்த பஸ்களின் சேவை தொடக்க விழா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தனர். அப்போது ஒரு பஸ்சில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ரத்தினவேல், குமார், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், பரமேஸ்வரி, கலெக்டர் ராஜாமணி, போக்குவரத்து கழக துணை மேலாளர் (தொழில்நுட்பம்) சிங்காரவேலன், கோட்ட மேலாளர் (நகரம்-புறநகரம்) வேலுச்சாமி உள்பட அதிகாரிகள் சிறிது தூரம் பயணம் செய்தனர்.

புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட 6 பஸ்களில் 4 பஸ்கள் திருச்சி-சேலம் இடையேயும், 2 பஸ்கள் திருச்சி-மதுரை இடையேயும் இயக்கப்படுகிறது. புதிய பஸ்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “திருச்சி-சேலம் 4 புதிய பஸ்களில் கண்டக்டர்கள் கிடையாது. பஸ்சில் ஏறும் போதே பயணிகளிடம் டிக்கெட் பணம் வசூலிக்கப்படும். டிரைவர் இருக்கை அருகே மைக் உள்ளது. பஸ் நிறுத்தம் தொடர்பாக மைக்கில் அவர் அறிவிப்பார். பெரும்பாலும் பாயிண்ட் டூ பாயிண்டாக இந்த பஸ்கள் இயக்கப்படும். திருச்சி மண்டலத்திற்கு மொத்தம் 100 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நவீன பஸ்கள் திருச்சிக்கு வர உள்ளது” என்றனர். 

Next Story