மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூடம் எதிரே டாஸ்மாக் கடை திறக்க முயற்சி எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் + "||" + The public demonstrated protesting against the school trying to open the Tashmak store

பள்ளிக்கூடம் எதிரே டாஸ்மாக் கடை திறக்க முயற்சி எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிக்கூடம் எதிரே டாஸ்மாக் கடை திறக்க முயற்சி எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் பள்ளிக் கூடம் எதிரே டாஸ்மாக் கடை திறக்க மீண்டும் முயற்சி மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,

தமிழகத்தில் சாலையை வகை மாற்றம் செய்து திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் 11 கடைகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 28 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 103 கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழகஅரசு மனு தாக்கல் செய்தது.


தடை விதிக்க மறுத்த சுப்ரீம்கோர்ட்டு மீண்டும் ஐகோர்ட்டை நாடும் படி அறிவுறுத்தியது. அதன்படி தமிழகஅரசு மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது குறிப்பிட்ட கடைகளை திறக்கலாம் என ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இந்தநிலையில் கடந்த மே மாதம் 29-ந் தேதி முதல் தஞ்சை மாநகராட்சியில் 10 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

தஞ்சை வடக்குவாசல் சுண்ணாம்புகாலவாய் தெருவில் பள்ளிக்கூடம் எதிரே டாஸ்மாக் கடை இருந்ததால் அந்த கடை மட்டும் மீண்டும் திறக்கப்படாமல் இருந்தது. இந்த டாஸ்மாக் கடையையும் திறப்பதற்காக அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் முயற்சி மேற்கொண்டு அதற்கான ஆயத்த பணியை தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என மாவட்ட கலெக்டரிடமும், டாஸ்மாக் மேலாளரிடமும் மனு அளித்தனர்.

ஆனாலும் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு ஒவ்வொரு பொருட்களாக கடைக்கு கொண்டு வரப்பட்டன. இந்தநிலையில் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்றுகாலை வடக்குவாசல் சுண்ணாம்புகாலவாய் தெருவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்கள் சிலர் கூறும்போது, குடியிருப்பு பகுதிகளில் அதுவும் பள்ளிக்கூடத்திற்கு எதிரே பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கோர்ட்டு தீர்ப்பு மூலம் எங்களுக்கு விடிவுகாலம் கிடைத்தது. இப்போது மீண்டும் கடையை திறக்க முயற்சி செய்கின்றனர். கடை திறக்கப்பட்டால் பெண்கள், மாணவ, மாணவிகள் தெருவில் தனியாக செல்ல முடியாது. மது குடித்துவிட்டு போதையில் வீட்டின் முன்பு படுத்து விடுவார்கள். அவர்களை எழுப்பினால் சண்டைக்கு வருவார்கள். எங்களது சுதந்திரமே பறிபோய் விடும். பள்ளிக்கூடத்திற்கு எதிரே டாஸ்மாக் கடையை திறந்தால் எப்படி மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவார்கள்.

ஏற்கனவே எங்கள் தெருவுக்கு நுழையும் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் கடையை திறக்கக்கூடாது. அப்படி மீறி திறந்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், கடையின் முன்பு குடியேறி, அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு தூங்கும் போராட்டமும் நடத்துவோம் என்று கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டம் ½ மணிநேரம் நடைபெற்றது. ஆனால் அதிகாரிகளோ, போலீசாரோ எவரும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.