சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்க முடியாது நாராயணசாமி பேட்டி


சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்க முடியாது நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 8 July 2018 4:45 AM IST (Updated: 8 July 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை ஏற்க முடியாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

மத்திய சட்டத்துறையானது பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக சட்ட ஆணையத்தின் மூலமாக இன்றும்(நேற்றும்), நாளையும் (இன்றும்) டெல்லியில் கூட்டம் கூட்டியுள்ளனர். இதற்கு முன்பே மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக மாநில அரசின் கருத்தை கேட்டார்கள். அப்போதே கருத்தை தெரிவித்துள்ளோம்.

இந்த திட்டமானது நடைமுறைக்கு ஏற்றதல்ல. சில சமயங்களில் பாராளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இறந்துவிட்டாலோ அல்லது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ அந்த தொகுதிக்கு தேர்தல் வரும். சில மாநிலங்களில் இரண்டு தேர்தலும் ஒன்றாக நடைபெறும். பல மாநிலங்களில் அதுபோல் நடைபெறாது.

இதனால் பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்லும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமானது அல்ல. தற்போது பல மாநிலங்களில் 2018-19ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் வருகிறது. பாராளுமன்றத்தோடு இணைந்து சில மாநிலங்களில் தேர்தல் வருகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் 2021-ல் வருகின்றன. இவற்றையொல்லாம் கணக்கிட்டு பார்க்கும்போது இந்த திட்டமானது நடைமுறைக்கு ஏற்றதல்ல.

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். சில சமயம் அதற்கு முன்பாகவே சட்டமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வரும். அந்த மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் வரும் வரை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று.

புதுச்சேரி மாநில அரசின் சார்பாகவும், காங்கிரஸ் கட்சி சார்பாகவும் இந்த திட்டத்தை முழுமையாக எதிர்க்கிறோம். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவது மிக சிரமமாக இருக்கும் என்பதை வலியுறுத்தி சட்ட ஆணையத்திற்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story