மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலக கட்டிடங்களில் ஏறி தொங்கியவாறு தேன் கூடுகளை அழித்து தேன் சேகரித்த வாலிபர்கள் + "||" + The honey collected by honey collected by the honey beets as they climbed into the Collector's office buildings

கலெக்டர் அலுவலக கட்டிடங்களில் ஏறி தொங்கியவாறு தேன் கூடுகளை அழித்து தேன் சேகரித்த வாலிபர்கள்

கலெக்டர் அலுவலக கட்டிடங்களில் ஏறி தொங்கியவாறு தேன் கூடுகளை அழித்து தேன் சேகரித்த வாலிபர்கள்
வேலூர் கலெக்டர் அலுவலக கட்டிடங்களில் இருந்த தேன்கூடுகளால் தேனீக்கள் கொட்டி ஊழியர்கள் அவதிப்பட்ட நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் கயிறு கட்டி ஏறி அந்தரத்தில் தொங்கியவாறு 20 தேன்கூடுகளை அழித்து தேனை சேகரித்தனர்.
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகத்தை தவிர மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், உதவி- கலெக்டர் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, இ-சேவை மையம், தபால் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.


கடந்த சில வாரங்களாக கலெக்டர் அலுவலகத்தின் 2 கட்டிடங்களிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேனீக்கள் பெரிய அளவிலான கூடுகள் கட்டியிருந்தன. இந்த கூடுகளில் இருந்த தேனீக்கள் அந்த பகுதியிலேயே சுற்றிச்சுற்றி மொய்த்தன. அலுவலகத்தின் கதவு ஜன்னல்களை ஊழியர்கள் திறக்கும்போது தேனீக்கள் கொட்டியதில் பலர் காயமடைந்தனர். கலெக்டர் அலுவலகத்துக்குள் சுற்றித்திரியும் குரங்குகளும் திடீரென தேன் கூட்டை கலைத்து விடுவதால் அதிலிருந்த தேனீக்கள் படையெடுத்து கொட்டியதிலும் பலர் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வடமாநிலத்தை சேர்ந்த 20 பேர் வந்தனர். அவர்கள் பல்வேறு கட்டிடங்களில் இருந்த தேன் கூடுகளை பார்த்து தேன் எடுக்க அனுமதி கேட்டனர். தேனீக்களால் தொல்லை இருந்ததால் அதிகாரிகளும் இதற்கு அனுமதி வழங்கினர்.

இதையடுத்து அவர்கள் தேன்கூடுகளை அழிப்பதற்காக தேனீக்கள்கூடு இருந்த கட்டிடங்களில் கயிறுகளை கட்டி வேப்பிலைகளை எரித்து புகைமூட்டம் உண்டாக்கியவாறு சர்வசாதாரணமாக ஏறினர். முன்னதாக தேனீக்கள் சேகரிக்கும் இரும்பு வாளிக்கும் தனியாக கயிறு கட்டி தேன்கூடு இருந்த இடத்துக்கு கீழே இருக்குமாறு செய்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் அந்தரத்தில் கயிற்றில் தொங்கியவாறு அமர்ந்து தேன் கூட்டை அழித்து தேனடைகளில் இருந்த தேனை இரும்பு வாளியில் சேகரித்தனர். ஒரே நேரத்தில் இதுபோன்று 20 இடங்களில் இருந்த தேன் கூடுகளை கலைத்து தேன் சேகரித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அதனை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் திரண்டு அவர்கள் தேன் எடுத்ததை பார்த்து வியந்தனர்.

அந்த வாலிபர்கள் சேகரித்த 200 கிலோதேனை கலெக்டர் அலுவலகத்திலேயே விற்க தொடங்கினர். கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் பலர் விலைக்கு வாங்கினர். முதலில் ஒரு கிலோ ரூ.400-க்கு விற்றனர். தேனை பலர் போட்டிபோட்டு வாங்கியதால் விலையை ரூ.100 அதிகரித்து அதாவது ஒரு கிலோ தேன் ரூ.500-க்கு விற்பனை செய்தனர்.

இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள். எங்களது பரம்பரை தொழில் தேன் எடுப்பதாகும். நாடோடி வாழ்க்கை மேற்கொண்டு தேன் எடுத்து அதில் கிடைக்கும் வருவாய் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம். வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேன் கூடுகளை பார்த்தோம். அனுமதி கிடைத்தபின் தேன் எடுத்துள்ளோம். இங்கு 20 தேன் கூடுகள் இருந்தது. ஒவ்வொன்றும் பெரிய அளவிலான தேன் கூடாகும். மொத்தம் 200 கிலோ தேன் எடுக்கப்பட்டுள்ளது. அமாவாசைக்கு முன்பு தேன் நாங்கள் எடுத்து விடுவோம். ஏனெனில் அமாவாசை அன்று தேனீக்கள் கூட்டில் உள்ள பாதி தேனை குடித்து விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் வேலூர் மாநகரில் ஆங்காங்கே உள்ள தேன் கூடுகளில் அவர்கள் இதே முறையில் தேன் எடுத்து வருகின்றனர்.