11 சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக 89 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்


11 சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக 89 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 July 2018 4:15 AM IST (Updated: 8 July 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

11 சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக 89 வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் பிரித்தல், வாக்குச்சாவடிகள் இடமாற்றம் மற்றும் பெயர்மாற்றம் ஆகியவை குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜய்பாபு, உதவி கலெக்டர் குமரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் தற்போது 3 ஆயிரத்து 241 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஊரக பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள், நகர பகுதிகளில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகளை ஏற்படுத்தவும், வாக்குச்சாவடி இடமாற்றம் மற்றும் வாக்குச்சாவடி பெயர் மாற்றம் செய்வது தொடர்பான இனங்கள் குறித்தும், வாக்குச்சாவடி மையங்கள் 2 கி.மீட்டருக்கு மிகாமல் அமைக்கவும் தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 89 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 38 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டும், 24 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டும், 57 பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி பிரித்தல் தொடர்பான உரிய முன்மொழிவு அறிக்கை சென்னை தலைமை தேர்தல் அதிகாரிக்கு வருகிற 18-ந் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பான கூற்றுக்கள் மற்றும் ஆட்சேபனைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரிடம் வருகிற 12-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. கருத்து அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சேலத்திற்கு பெங்களூருவில் இருந்து 8 ஆயிரத்து 200 வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 960 கட்டுப்பாட்டு எந்திரங்களும் வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினர் கூறுகையில், 1000 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், வாக்குச்சாவடிகளுக்கு இடையேயான தூரத்தை 2 கி.மீட்டர் என்பதை குறைக்க வேண்டும் என்றும், கருத்து தெரிவிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம் என்றனர். 

Next Story