கர்நாடக கடலோர மாவட்டங்கள்– காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மழைக்கு 3 பேர் பலி
கர்நாடக கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
மங்களூரு,
கர்நாடக கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழைக்கு சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.
விடிய, விடிய பலத்த மழைகர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன்காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. மேலும் முக்கியமான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. சாலைகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடின. தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். கடந்த ஒரு மாதமாக இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழை, கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅந்தப்பகுதிகளில் நேற்றும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது கனமழை கொட்டி வருவதால் சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடுகிறது. மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விடிய, விடிய மழை கொட்டி தீர்த்ததால், நேற்று குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரீவித்யா உத்தரவிட்டார். இதேபோல, தட்சிண கன்னடா மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்த மூடபித்ரி, புத்தூர், பெல்தங்கடி, சுள்ளியா ஆகிய 3 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் சசிகாந்த் செந்தில் உத்தரவிட்டார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா, விராஜ்பேட்டை, மடிகேரி, கோணிகொப்பா, சித்தாப்புரா, சுண்டிகொப்பா, சோமவார்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்புமேலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,505 கனஅடியாக இருந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 3,,483 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் (முழுகொள்ளளவு–124.80 அடி) 108.82 அடியாக இருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.
அதேப் போல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் (முழுகொள்ளளவு 2,284 அடி(கடல்மட்டத்தில் இருந்து) நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கபினி அணைக்கும் நேற்று மாலை நீர்வரத்து அதிகமானது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்தது. அதே வேளையில் அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,282.50 அடியாக இருந்தது.
2 பேர் சாவுஇதேபோல, கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் புத்தூர், பெல்தங்கடி, சுள்ளியா தாலுகாக்களில் தான் அதிகளவு மழை கொட்டி வருகிறது. பண்ட்வாலில் விட்டலா–சாலந்தூர் இணைக்கும் சாலை மழைவெள்ளத்தில் மூழ்கி உள்ளது. புத்தூர் தாலுகா ஹெப்பரபயல் பகுதியை சேர்ந்த பார்வதி(வயது 65) என்பவர் தனது பேரன் தனுசுடன் (11) நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 1.45 மணி அளவில் திடீரென்று வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பார்வதி, தனுஷ் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதுபோல் உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
3 ஆறுகளில் வெள்ளப்பெருக்குசிக்கமகளூரு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக சிருங்கேரி, கொப்பா, என்.ஆர்.புரா, மூடிகெரே ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆகிய ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3 ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கலசா–ஒரநாடு இடையேயான தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 வாரத்திற்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக தரைமட்ட பாலம் மூழ்கியது குறிப்பிடத்தக்கது. சிருங்கேரி தாலுகாவில் பல கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட விவசாயிசிருங்கேரி தாலுகா கோணிபயல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரா(46). விவசாயி. இவர் நேற்று காலை அந்தப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய நிலத்தையொட்டி உள்ள பெரிய கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் அவர், அந்த கால்வாயில் வழக்கம்போல கை, கால்களை கழுவ சென்றுள்ளார். அப்போது, கால்வாயில் அதிகளவு தண்ணீர் வந்ததால், சுரேந்திரா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள், அவரை மீட்க முயன்றனர். ஆனாலும் அதற்குள் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிருங்கேரி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, சுரேந்திராவின் உடலை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைகர்நாடக கடலோர மாவட்டங்கள், சிக்கமகளூரு, குடகு ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.