நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை 11 நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய சித்ரதுர்கா கோர்ட்டு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
பெங்களூரு,
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. கொலை நடந்த 11–வது நாளில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனைவி கொலைகர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே தாலுகா வாலசே கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர் சாமி (வயது 75). இவருடைய மனைவி புட்டம்மா (63). இந்த நிலையில், புட்டம்மாவின் நடத்தையில் பரமேஸ்வர் சாமிக்கு சந்தேகம் எழுந்தது. அவர் புட்டம்மாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
கடந்த மாதம் (ஜூன்) 27–ந் தேதி இரவும் புட்டம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, பரமேஸ்வர் சாமி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின்போது புட்டம்மா, பரமேஸ்வர் சாமியை திட்டியதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக புட்டம்மா வீட்டில் படுத்து தூங்கினார். இந்த வேளையில், பரமேஸ்வர் சாமி தூங்கி கொண்டு இருந்த புட்டம்மாவின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார்.
ஆயுள் தண்டனைஇதுகுறித்த புகாரின் பேரில் தலக் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வர் சாமியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சித்ரதுர்கா மாவட்ட முதன்மை மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வஸ்த்ராமட் நேற்று தீர்ப்பு கூறினார்.
அப்போது, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பரமேஸ்வர் சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாகவும் நீதிபதி விதித்தார். இதையடுத்து, பரமேஸ்வர் சாமி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பரமேஸ்வர் சாமிக்கு எதிராக அவருடைய மகன் கிரீஷ் உள்பட 17 பேர் சாட்சியங்கள் அளித்தனர்.
11 நாளில் தீர்ப்புபுட்டம்மா கொலை செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன நிலையில் கொலையாளியான அவருடைய கணவர் பரமேஸ்வர் சாமிக்கு நேற்று ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இது இந்திய நீதித்துறையின் புதிய மைல்கல் ஆகும். அதாவது, குற்ற வழக்கில் மிக விரைவில் தீர்ப்பு கிடைத்த வழக்காக இந்த வழக்கு அமைந்து உள்ளது. இதற்கு முன்பு ஒரு வழக்கில் 23 நாட்களில் உத்தர பிரதேச கோர்ட்டு தீர்ப்பு கூறியது தான் மிக விரைவில் வழங்கிய தீர்ப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.