வேளாண்மை கல்லூரி முதல்வர் வீட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை


வேளாண்மை கல்லூரி முதல்வர் வீட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 9 July 2018 4:30 AM IST (Updated: 8 July 2018 10:39 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே வேளாண்மை கல்லூரி முதல்வர் வீட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், சொகுசு காரையும் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,


நாகர்கோவில் அருகே உள்ள தெங்கம்புதூர் தெற்கு பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் சென்னை விமான நிலையத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜேன்சுஜாதா (வயது 57). இவர் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள வேளாண்மை கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு விவேக் சுதின் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் டெல்லியில் தங்கியிருந்து விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். மகள் கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

ஜேன்சுஜாதா வேலைக்கு செல்ல வசதியாக ராதாபுரத்தில் தங்கியுள்ளார். வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர்களில் தங்கியிருப்பதால், ஊரில் உள்ள இவர்களது வீடு எப்போதும் பூட்டியே கிடந்தது. ராதாபுரத்தில் தங்கியுள்ள ஜேன்சுஜாதா வாரத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார். அதன்படி, கடந்த 30–ந் தேதி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.


அதன்பின்னர் நேற்று வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன் உள்ள காம்பவுண்டு சுவர் கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்றார். அங்கு அறை கதவுகளும், பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

 வீட்டில் இருந்த மிக்சி, கிரைண்டர், புதிய பாத்திரங்கள், விலைஉயர்ந்த பொருட்கள் என ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.


மேலும், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் காணவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட கார்– பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி செல்லும் போது, வெளியே நின்ற சொகுசு காரையும் கடத்தி சென்றுள்ளனர்.


இந்த கொள்ளை சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜேன்சுஜாதாவின் மகன் விவேக் சுதினுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் மகனும், மருமகளும் டெல்லியில் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார்கள். திருமணத்தின் போது சீர் வரிசையாக ரூ.17 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தும் இந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தன.

வீட்டின் வெளியே சொகுசு கார் அருகே, ஒரு பழைய காரும் நிறுத்தப்பட்டிருந்தன. கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சீர் வரிசை பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வெளியே நின்ற சொகுசு காரையும் கடத்தி சென்றுள்ளனர். வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பழைய கார் அப்படியே நின்றது.

Next Story