2–வது நாளாக கனமழை நீடிப்பு கர்நாடக கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது 950 வீடுகள் இடிந்தன
கர்நாடக கடலோர மாவட்டங்களில் 2–வது நாளாக நேற்று கனமழை நீடித்தது. தொடர் கனமழைக்கு 950 வீடுகள் இடிந்தன.
மங்களூரு,
கர்நாடக கடலோர மாவட்டங்களில் 2–வது நாளாக நேற்று கனமழை நீடித்தது. தொடர் கனமழைக்கு 950 வீடுகள் இடிந்தன. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவமழைகர்நாடகத்தில் கடந்த மே மாத கடைசியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதுமுதல் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
குறிப்பாக தென்மேற்கு பருவமழையின் தாக்கம் கர்நாடக கடலோர மாவட்டங்களைத் தான் அதிகம் பதம் பார்த்தது. இதனால் கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, கார்வார், உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. அந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பல்குனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்த ஆற்றின் நடுவே அமைந்திருந்த ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது.
மீண்டும் பலத்த மழைஇப்படி இருக்க 6–ந்தேதி தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் கார்வார் மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்தது. பின்னர் அது தொடர் கனமழையாக மாறி நேற்று முன்தினம் வரை இடைவிடாது கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் சில இடங்களில் மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் மக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல், வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இந்த நிலையில் நேற்றும் தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் கார்வார் மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் மிதக்கிறது. தொடர்ந்து 2–வது நாளாக கனமழை கொட்டியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. கனமழையால் தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல் அருகே சேலாறு கிராமத்தில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மங்களூரு அருகே கத்ரி பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் அமைந்திருக்கும் வீடுகளில் சிக்கிக்கொண்டவர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். அவர்களும் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் ஏராளமான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. நேற்று பலத்த மழையின்போது தர்மஸ்தலா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு காரின் மீது 2 மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. மேலும் ஒரு மின்கம்பமும் சரிந்து விழுந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் பெங்களூருவில் இருந்து தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் என்று கூறப்படுகிறது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்குமேலும் நேத்ராவதி, பல்குனி, குமாரதாரா, வரகி, சவுபர்னிகா ஆகிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் தலைநகரங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் உடனடியாக அந்த உதவி மையங்களை அணுகலாம் என்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரப்பர் படகுகள் மூலம்...இதேபோல், உடுப்பி மாவட்டத்திலும் 2–வது நாளாக தொடர் கனமழை கொட்டியது. குறிப்பாக கார்கலா, குந்தாப்புரா, பைந்தூர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அப்பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளன. ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் படகுகள் மற்றும் ரப்பர் படகுகள் மூலம் சென்று வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்டு வருகிறார்கள். இதற்கிடையே மழை விட்டு, விட்டு பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கிக் கொண்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கர்ப்பிணி பெண் மீட்புஇதற்கிடையே உடுப்பி மாவட்டம் படுபித்ரி அருகே வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் ஒரு வீட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் சிக்கிக் கொண்டார். அவரை ரப்பர் படகு மூலம் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர். இதேபோல் அப்பகுதியில் வீடுகளில் சிக்கியிருந்த சிறுவர், சிறுமிகள், முதியோர் என அனைவரையும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். அவர்கள் தற்போது அரசு பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உதவிகளை அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் கார்வார் மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்னாவர், குமட்டா, பட்கல் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கார்வார் மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உடுப்பியில் அதிக மழைநேற்று காலை நிலவரப்படி உடுப்பி, தட்சிண கன்னடா மற்றும் கார்வார் மாவட்டங்களில் பதிவான மழை நிலவரங்கள் மில்லி மீட்டரில் வருமாறு:–
உடுப்பி:உடுப்பி 244.1 மி.மீ. (மில்லி மீட்டர்), கார்கலா 195 மி.மீ., குந்தாப்புரா, 155.9 மி.மீ.,.
தட்சிண கன்னடா:சுள்ளியா 189.5 மி.மீ., புத்தூர் 151.2 மி.மீ., மங்களூரு 163.5 மி.மீ., பண்ட்வால் 171.5 மி.மீ., பெல்தங்கடி 115.5 மி.மீ.
கார்வார்:ஒன்னாவர் 180.6 மி.மீ., குமட்டா 158.2 மி.மீ., அங்கோலா 135.1 மி.மீ., சித்தாப்பூர் 195 மி.மீ., கார்வார் 102.9 மி.மீ.
இதில் உடுப்பியில் தான் அதிக அளவிலான மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மழை நீடிக்கும்தட்சிண கன்னடா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று 2–வது நாளாக கனமழை பெய்தது. இதனால் மங்களூரு மற்றும் கார்வார், உடுப்பி கடல் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அலைகள் 3.3 மீட்டரில் இருந்து 3.6 மீட்டர் உயரத்தில் சீறிப்பாய்ந்து வருகின்றன. மேலும் அப்பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் மீனவர்கள் யாரும், மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு இதேபோல் மழை நீடிக்கும் என்று வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை 1,958.8 மி.மீ. மழைஇந்த நிலையில் நேற்று மந்திரி யு.டி.காதர் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு வந்தார். அவர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை உள்பட அனைத்து அரசு அதிகாரிகளுடன் மீட்பு பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இம்முறை பருவமழை தொடங்கியது முதல் இதுவரை தட்சிண கன்னடா மாவட்டத்தில் 1,958.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வருகிற 11–ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆறுகள் உடைப்பு ஏற்படும் அபாயம்தற்போது மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. அதனால் மீட்பு பணிகளை முடுக்கிவிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வருகிற 11–ந் தேதி வரை அனைத்து துறை அரசு அதிகாரிகளும் துரிதமாக செயல்பட உத்தரவிட்டு இருக்கிறேன். ஏனெனில் இம்முறை வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எந்த நேரத்திலும் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அதிகாரிகள் அனைவரும் கவனமுடன் செயல்பட்டு மீட்பு பணிகளை துரிதமாக செய்ய வேண்டும்.
950 வீடுகள் இடிந்தனகடந்த 2 நாட்களில் இடைவிடாது பெய்த கனமழையால் மாவட்டத்தில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. இதுவரை 950–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தும், பாதி அளவு சேதம் அடைந்தும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் முதலில் மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.
இதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்மூலம் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மாவட்ட தலைநகர் மற்றும் முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உடனடியாக அந்த உதவி மையங்களை அணுகலாம்.
இவ்வாறு மந்திரி யு.டி.காதர் கூறினார்.
இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான உபகரணங்கள், 8 ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், கூடாரங்கள் ஆகியவற்றை மந்திரி யு.டி.காதர் வழங்கினார். இதற்கிடையே மங்களூருவில் மழையால் சேதமடைந்த பகுதிகளை நளீன்குமார் கட்டீல் எம்.பி. பார்வையிட்டார். வீடுகளை இழந்தவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.