காந்தி மார்க்கெட்டில் சுமைப்பணி தொழிலாளர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது


காந்தி மார்க்கெட்டில் சுமைப்பணி தொழிலாளர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 8 July 2018 11:00 PM GMT (Updated: 8 July 2018 7:46 PM GMT)

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமைப்பணி தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட் அருகில் உள்ள சப்– ஜெயில் ரோட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த வெங்காய மண்டி கடந்த ஜூன் மாதம் 3–ந்தேதி பழைய பால்பண்ணை அருகே புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட வெங்காய மண்டியில் ஏற்கனவே பழைய வெங்காய மண்டியில் வேலை செய்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. வெங்காய கமி‌ஷன் மண்டி வியாபாரிகள் லாரிகளில் வெங்காயம் ஏற்ற மற்றும் இறக்குவதற்கு புதிதாக தொழிலாளர்களை நியமித்துக்கொண்டனர்.

இதனால் பழைய வெங்காய மண்டியில் வேலை வாய்ப்பை இழந்த 276 சுமைப்பணி தொழிலாளர்கள் புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க கோரி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். குடும்பத்துடன் வந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள். சப் –ஜெயில்ரோட்டில் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நள்ளிரவில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

இந்நிலையில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, எல்.எல்.எப், டி.யு.சி.சி. ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டத்தில் வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாக காந்திமார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழங்கள், தேங்காய், மாங்காய், நாட்டு காய்கறிகள் உள்பட அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களும் ஆதரவு கொடுப்பது, அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களும் ஜூலை 8–ந்தேதி மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி சுமைப்பணி தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று மாலை தொடங்கியது. போராட்டம் தொடங்கியதற்கு அறிகுறியாக முதலில் சப்– ஜெயில் ரோடு வெங்காய மண்டி அருகில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஒன்று கூடி தங்களுக்கு வேலை வழங்க கோரி கோ‌ஷம் போட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காந்திமார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே அனைத்து கமி‌ஷன் மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் தட்டு வண்டி, தள்ளுவண்டி உள்ளிட்டவற்றை ஓரமாக நிறுத்தி வைத்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

இரவு 8 மணிக்கு மேல் வெளி இடங்களில் இருந்து காந்திமார்க்கெட்டுக்கு காய்கறி லோடுடன் லாரிகள் வந்தன. அந்த லாரிகளில் இருந்து காய்கறிகளை சுமைப்பணி தொழிலாளர்கள் இறக்கவில்லை. இதனால் தக்காளி, மாங்காய், தேங்காய் ஆகியவற்றை ஏற்றி வந்த லாரிகள் காந்திமார்க்கெட் பின்புறம் உள்ள காந்தி சிலை மற்றும் கீழப்புலிவார்டு சாலைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன. ஒரு சில லாரிகளில் இருந்து காய்கறிகளை வியாபாரிகள் தங்களது கடைகளில் வேலை செய்யும் ஆட்களை வைத்து இறக்க முயன்றனர். ஆனால் சுமைப்பணி தொழிலாளர்கள் அவர்களை இறக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தேங்காய் கமி‌ஷன் மண்டியில் உள்ள ஒரு கடையில் தேங்காய் இறக்குவதை கண்ட தொழிலாளர்கள் திரண்டு வந்து அதனை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் பிரச்சினையில் ஈடுபட்டவர்களை விரட்டி சென்று தள்ளிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக போலீஸ் உதவி கமி‌ஷனர்கள் பெரியண்ணன், விக்னேஸ்வரன், திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் தொழிற்சங்க தலைவர்கள் ராமலிங்கம் (தொ.மு.ச), ராஜா, ராமர்(சி.ஐ.டி.யு), பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கம்) ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது தொழிற்சங்க தலைவர்கள் புதிய வெங்காய மண்டியில் வியாபாரிகளின் ஏற்பாட்டின்படி மூட்டை ஏற்றி இறக்கும் வேலை நடைபெறுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், பழைய வெங்காய கமி‌ஷன் மண்டி தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் தான் போராட்டத்தை கைவிட முடியும். இல்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறிவிட்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த காந்திமார்க்கெட்டில் உள்ள சுமார் 2 ஆயிரம் சுமைப்பணி தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து இருப்பதால் நேற்று இரவு காய்கறிகள் எதுவும் லாரிகளில் இருந்து இறக்கப்படவில்லை. இதன் காரணமாக இன்று காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும். போராட்டம் தொடர்ந்தால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயரவும் வாய்ப்பு உள்ளது.


Next Story