குடோன் கண்டுபிடிப்பு: தமிழகம் முழுவதும் போலி மதுபானம் சப்ளை? போலீசார் தீவிர விசாரணை


குடோன் கண்டுபிடிப்பு: தமிழகம் முழுவதும் போலி மதுபானம் சப்ளை? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 8 July 2018 11:15 PM GMT (Updated: 8 July 2018 8:33 PM GMT)

நாகர்கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள குடோனில் இருந்து போலி மதுபானம் தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டதா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

திண்டுக்கல்-பழனி சாலையில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து சோதனை செய்தனர். அப்போது காரில் போலி மதுபான பாட்டில்கள் பெட்டி, பெட்டியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலி மதுபான பாட்டில்களை கடத்தி வந்த குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த துளசி (வயது 37) என்பவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், போலி மதுபான பாட்டில்களை நாகர்கோவிலில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. உடனே திண்டுக்கல் போலீசார் நாகர்கோவில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து நாகர்கோவில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் போலி மதுபான குடோன் இருப்பதும், அந்த கோழி பண்ணை நாகர்கோவில் அருகே பொட்டல் வாத்தியார் தோப்பில் இருப்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று போலி மதுபான குடோனை தேடிய போது கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன் எனில் குடோன் இருப்பதற்கான எந்த சாத்தியகூறுகளும் அங்கு தென்படாமல் இருந்தது. பண்ணை முழுவதிலும் கோழிகளே இருந்தன.

அதைத் தொடர்ந்து பண்ணையில் இருந்த கோழிகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி போலீசார் சோதனையை தொடர்ந்தனர். அப்போது கோழிகள் இருந்த இடத்தின் ஒரு பகுதியில் நிறைய சாக்கு மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த சாக்கு மூடைகளை போலீசார் அகற்றி பார்த்தபோது அதற்கு கீழே ஒரு சிறிய சுரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த சுரங்கத்துக்குள் இறங்கி ஆய்வு செய்தனர். அப்போது தான் போலி மதுபான குடோன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு எரிசாராயம் மற்றும் போலி மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் எரிசாராயம் நிரப்புவதற்காக பெரிய கேன்கள், காலி மதுபான பாட்டில்கள், பாட்டில் மூடிகள், பாட்டில்களை வைப்பதற்கு தேவையான அட்டை பெட்டிகள், பிரபல மதுபான கம்பெனிகளின் ஸ்டிக்கர்கள், மதுபானம் நிரப்ப தேவையான எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் அங்கு மறைந்து வைக்கப்பட்டு இருந்தன.

இதனைத் தொடர்ந்து 175 லிட்டர் எரிசாராயம் மற்றும் 70 லிட்டர் போலி மதுபானம் மற்றும் போலி மதுபானம் தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதோடு கோழி பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாயாண்டி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவரை நாகர்கோவிலில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் எரிசாராயம் மற்றும் போலி மதுபானம் பிடிபட்டதை தொடர்ந்து கோழி பண்ணை உரிமையாளர் செந்தில்குமார் தலைமறைவாகி விட்டார். எனினும் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக கோழி பண்ணை உரிமையாளர் செந்தில்குமார், காவலாளி மாயாண்டி, தக்கலையை சேர்ந்த துளசி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் சுந்தர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் காவலாளி மாயாண்டி கைது செய்யப்பட்டார்.

வாத்தியார் தோப்பில் உள்ள கோழி பண்ணையில் பல ஆண்டுகளாக போலி மதுபான குடோன் செயல்பட்டு வந்துள்ளது. இந்த தோப்பு அம்மாண்டிவிளையை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அந்த பேராசிரியர் தற்போது சென்னையில் வசிக்கிறார். அந்த தோப்பை செந்தில்குமார் குத்தகைக்கு வாங்கி கோழி பண்ணை நடத்தி வந்துள்ளார். கோழிகளுக்கு தீவனம் கொண்டு வருவது போல போலி மதுபானத்துக்கு தேவையான எரிசாராயத்தை பெங்களூரு மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்துள்ளனர். பின்னர் எரிசாராயத்தில் கலர் பொடி கலந்து போலி மதுபானமாக மாற்றி இருக்கிறார்கள். அதன்பிறகு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மதுபாட்டில் போன்றே ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை ஒட்டி சந்தேகமே வராத அளவுக்கு மதுபான பாட்டிலாக மாற்றி விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.

இங்கு தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள் தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கோழிகளை ஏற்றிச் செல்வது போல இந்த போலி மதுபானங்களை ஏற்றிச் சென்றதாகவும் தெரிகிறது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டவர்கள் மூலமாக தற்போது நாகர்கோவில் அருகே போலி மதுபான குடோன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது காவலாளி மாயாண்டியை கைது செய்துள்ளோம். மேலும் துளசி மற்றும் கார்த்திக் ஆகியோர் திண்டுக்கலில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடி வருகிறோம். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரும் போலி மதுபானங்களை தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. மீதமுள்ளவர்களும் கைது செய்யப்பட்ட பிறகு மேலும் விவரங்கள் தெரியவரும். இந்த வழக்கில் முக்கிய நபர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றார்.

நாகர்கோவில் அருகே போலி மதுபான குடோன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story