‘சமூக வலைதளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்’ பொதுமக்களுக்கு, முதல்-மந்திரி பட்னாவிஸ் வேண்டுகோள்
குழந்தை கடத்தல் வதந்தியால் 5 பேர் அடித்து கொல்லப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துமாறு முதல்-மந்திரி பட்னாவிஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை,
குழந்தை கடத்தல் வதந்தியால் 5 பேர் அடித்து கொல்லப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துமாறு முதல்-மந்திரி பட்னாவிஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 பேர் அடித்துக்கொலை
சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் கும்பல் தொடர்பாக வலம் வந்த வதந்தியை உண்மை என நம்பிய பொதுமக்கள், துலே மாவட்டம் ரெயின்படா கிராமம் அருகே பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 5 பேரை அடித்து கொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரையில் 24 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பலரை வலைவீசி தேடி வருகின்றனர். இதையடுத்து பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக மராட்டியத்தில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பையில் நிருபர்களை சந்தித்த முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறியதாவது:-
ரூ.10 லட்சம் இழப்பீடு
துலே சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. வதந்திகளால் 5 பேர் உயிர் இழந்து இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்க நாம் அனைவரும் உறுதியான எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொறுப்பற்ற தகவல்களை தடுக்குமாறு சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குடிமகன்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், தற்போதைய நவீன தொலைத்தொடர்பு முறைகள் அனைத்தும் அறிவார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கே ஆகும். நாம் அனைவரும் புத்திசாலித்தனமாக சமூக மேம்பாட்டுக்காகவே இவற்றை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story