சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை


சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை
x
தினத்தந்தி 10 July 2018 3:30 AM IST (Updated: 10 July 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்துவருகிறது.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் ஹேமாவதி, துங்கா, பத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் முல்லையன்கிரி மலையிலும், ஜதிக்கல்கண்டி பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சிருங்கேரி, கொப்பா, என்.ஆர்.புரா, மூடிகெரே ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்றும் தொடர்ந்து 4-வது நாளாக மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் சிக்கமகளூரு மாவட்டத்தில் பாய்ந்தோடும் ஹேமாவதி, துங்கா, பத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சிக்கமகளூரு மாவட்டம் முல்லையன்கிரி மலையில் கைமரம்-சீதாலயன்கிரி மலைகளுக்கு இடைப்பட்ட சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீதாலயன்கிரி மலைக்கு தங்களுடைய சொந்த வாகனங்களில் சுற்றுலா சென்ற பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சாலைகளில் மண் அரிப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மழையால் பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால், மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் மரங் கள் முறிந்து சாலைகளிலும், வாகனங்கள் மீதும், வீடுகள் மீதும் விழுந்து சேதப்படுத்தி உள்ளன. இதுமட்டுமல்லாமல் பாபாபுடன் கிரி மலைக்கு செல்லும் வழியில் ஜதிக் கல்கண்டி பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதி சாலைகள் சேதம் அடைந்திருக்கின்றன.

ஹேமாவதி ஆற்றின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக ஜாவ்லி பகுதி அமைந்திருக்கிறது. தற்போது ஹேமாவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குமாரசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஜாவ்லி பகுதிக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர் கனமழையால் பத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஹொரநாடு அருகே பத்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் மூழ்கி உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் துங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹொரநாடு தரைப்பாலம் இதுவரை 3 முறை மூழ்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சிருங்கேரியில், துங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ள சாரதம்மன் கோவிலிலும் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு படித்துறைகள் அனைத்தையும் மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சிக்கமகளூரு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story