திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
போலீசார் பொய் வழக்கு போடுவதை தடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர், போலீசார் தங்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், அப்பாவி மக்களை கைது செய்வதை கைவிடக்கோரியும் நேற்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மாமண்டூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் பக்கத்து கிராமமான நாவல்குப்பத்தை சேர்ந்தவர்களும், நாங்களும் சகோதர, சகோதரிகள் போல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும், நாவல்குப்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதுபற்றி பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எங்கள் கிராமத்தை சேர்ந்த 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் போலீசார், எங்கள் கிராமத்தை சேர்ந்த வயதானவர்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாய வேலைக்கு செல்பவர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் விசாரணை என்ற பெயரில் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அப்பாவி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டுகின்றனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நாங்கள், எங்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை தடுத்து, அப்பாவி மக்களை கைது செய்யும் நடவடிக்கையை கைவிடும்படி வலியுறுத்தியே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் அவர்கள், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வ.பாலா என்ற பாலயோகி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தியை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.