கங்கைகொண்டான் அருகே வேன் கவிழ்ந்து டிரைவர்-பெண் பலி


கங்கைகொண்டான் அருகே வேன் கவிழ்ந்து டிரைவர்-பெண் பலி
x
தினத்தந்தி 9 July 2018 10:30 PM GMT (Updated: 9 July 2018 7:33 PM GMT)

கங்கைகொண்டான் அருகே வேன் கவிழ்ந்து டிரைவரும், ஒரு பெண்ணும் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கயத்தாறு, 

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த வேளார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52), விவசாயி. இவருடைய உறவினரான அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், கோவையைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் மறுவீட்டு நிகழ்ச்சியாக, புதுமண தம்பதியை கோவைக்கு அழைத்து சென்று விட்டு வருவதற்காக, முருகன் தன்னுடைய உறவினர்களுடன் வேனில் புறப்பட்டு சென்றார்.

பின்னர் புதுமண தம்பதியை கோவையில் விட்டுவிட்டு, நேற்று முன்தினம் இரவில் அங்கிருந்து முருகன் மற்றும் உறவினர்கள் வேனில் தங்களது ஊருக்கு புறப்பட்டனர். மானூர் அருகே தெற்குபட்டியைச் சேர்ந்த ஜெயபால் (42) வேனை ஓட்டிச் சென்றார். 

நேற்று காலை 6.30 மணியளவில் கயத்தாறு- கங்கைகொண்டான் இடையே புலவர்த்தான்குளம் வளைவு பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சாரல் மழை பெய்தது. அங்கு வேன் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால், டிரைவர் உடனே ‘பிரேக்’ பிடிக்க முயன்றார். இதில் நிலைதடுமாறிய வேன் நாற்கர சாலை தடுப்பு சுவரை தாண்டி, வலதுபுற சாலையில் உருண்டு, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், டிரைவர் ஜெயபால், முருகனின் மனைவி பார்வதி (52) ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் வேனில் வந்த இசக்கிமுத்து (37), அவருடைய மனைவி மணிமாலா (32), மற்றொரு முருகன் (34), அவருடைய மனைவி பரமேசுவரி (33), லட்சுமி அம்மாள் (62), சுதர்சன் (22) ஆகிய 6 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த இசக்கிமுத்து உள்ளிட்ட 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த ஜெயபால், பார்வதி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் வேனில் இருந்த 2 சிறுமிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான வேன் நாற்கர சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி உருண்டபோது, வலதுபுற சாலையில் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த பகுதியில் சாலை வளைவாகவும், சாலையில் தார் அதிகமாக வழுவழுப்பாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அங்கு அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. அங்கு சாலை அமைத்ததில் இருந்து 13 முறை விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. எனவே, அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். சாலையில் வழுவழுப்பை போக்கி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story