நிலுவை தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
நிலுகை தொகை வழங்கக்கோரி திருப்புவனம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புவனம்,
கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகை, வங்கிகளுக்கு சேர வேண்டிய பாக்கி தொகை ஆகியவற்றை வழங்கக்கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்புவனம் அருகே படமாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். காத்திருப்பு போராட்டத்தில் முத்துராசா, ராமு, சதாசிவம், வக்கீல் செந்தில்வேல் உள்பட கரும்பு விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகளை அழைத்து சர்க்கரை ஆலையில் வைத்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆலய நிர்வாகம் சார்பில் துணைத்தலைவர் ஆறுமுகம், பொது மேலாளர் உத்தண்டி, மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பால்பாண்டி(திருப்பாச்சேத்தி), சேது(திருப்புவனம்), சுந்தரமாணிக்கம்(மானாமதுரை) மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கரும்பு விவசாயிகள் சார்பில் மாவட்ட தலைவர் தண்டியப்பன், சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகை ரூ.4 கோடியே 30 லட்சத்தை வருகிற 31–ந்தேதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கரும்பு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.