மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public Strict Propagation for Hearing Basic Facilities

அடிப்படை வசதிகள் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதிகள் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
இளையான்குடி, ரசூலா சமுத்திரத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை செய்துதர கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையான்குடி,

இளையான்குடியை அடுத்த ரசூலா சமுத்திரத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இங்கு அடிப்படை வசதிகள் என்பது சரிவர செய்துதரவில்லை என்று பலமுறை இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ரசூலா சமுத்திரத்தில் சீராக குடிநீர் வழங்காததால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தெருக்களின் சாலை சேதமடைந்தும், மின்விளக்குகள் சரிவர எரியாமலும் உள்ளது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில் ரசூலா சமுத்திரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருக்களில் உள்ள மின்விளக்குளை சரிசெய்து தரவேண்டும், இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர்கள் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, தங்களது கோரிக்கைளை பேரூராட்சி அலுவலகத்தில் முறையிடுமாறு கூறிவிட்டனர். அதன்பின்பு அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசாரும், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாராமும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.