கர்நாடக சட்டசபையில் குமாரசாமி-எடியூரப்பா இடையே கடும் வாக்குவாதம்


கர்நாடக சட்டசபையில் குமாரசாமி-எடியூரப்பா இடையே கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 10 July 2018 4:45 AM IST (Updated: 10 July 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா-குமாரசாமி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் பேசிய எடியூரப்பா நம்பிக்கை துரோகம் குமாரசாமியின் ரத்தத்தில் ஊறியது என்று குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து எடியூரப்பா-குமாரசாமி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது உறுப்பினர்களும் பேசியதால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. குமாரசாமி பதிலளித்தார்

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி குமாரசாமி 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை உணவு இடைவேளை வரை நடைபெற்றது.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை கூட்டம் 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளித்தார். அவர் பதிலளித்து முடித்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எழுந்து பேசினார்.

அவர் பேசுகையில், “விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தலின்போது குமாரசாமி வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இதனால் விவசாயிகள் இந்த அரசுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ளனர். எங்கள் கட்சி இந்த தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் மக்கள் எங்களுக்கு தனிப்பெரும்பான்மையை வழங்கவில்லை. காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மக்களின் முடிவுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன. முன்பு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தன. தரம்சிங் முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது குமாரசாமி அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு, எங்கள் கட்சியுடன் கைகோர்த்தார். தரம்சிங்கின் முதுகில் அவர் குத்தினார்“ என்றார்.

அப்போது குமாரசாமி குறுக்கிட்டு, “எடியூரப்பா இவ்வாறு பேசுவது சரியல்ல. என்னை முதல்-மந்திரி ஆக்குங்கள் என்று யாருடைய வீட்டுக்கும் செல்லவில்லை. நீங்கள்(எடியூரப்பா) தான் எனது வீட்டுக்கு வந்து மந்திரி பதவி கொடுத்தால் பா.ஜனதாவை விட்டு விலகி வந்து விடுவதாக கூறினீர்கள். நீங்கள் என்னென்ன பேசினீர்கள் என்று எனக்கு தெரியும். அதையெல்லாம் சொல்ல வேண்டிய நிலை வரும்“ என்றார். அப்போது குமாரசாமிக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. இருவரும் குரலை உயர்த்தி பேசினர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அப்போது பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு கட்சியினரும் குரலை உயர்த்தி பேசியதால் சபையில் கூச்சல்-குழப்பம் நீடித்தது. இதனால் சபையில் சிறிது நேரம் அமளி உண்டானது.

அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார் பேசுகையில், “நீங்கள் இவ்வாறு எழுந்து நின்று சத்தம் போட்டு பேசி கூச்சலை ஏற்படுத்துவது சரியல்ல. குமாரசாமியும், எடியூரப்பாவும் பேசுகிறார்கள். இருவருக்கும் பதில் சொல்லும் திறன் உள்ளது. அதனால் நீங்கள் தேவை இல்லாமல் எழுந்து குறுக்கிட்டு பேச வேண்டாம். அனைவரும் அமைதியாக இருங்கள். குமாரசாமி குறித்து எடியூரப்பா பேசிய பேச்சை அவை குறிப்பில் ஏற்றுவதை நிறுத்தி வைக்கிறேன்” என்றார். பின்னர் மீண்டும் எடியூரப்பா பேசியதாவது:-

பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின்போது, ஆளுக்கு 20 மாதங்கள் முதல்-மந்திரி பதவியை நிர்வகிப்பது என்று பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் 20 மாதங்கள் இருந்தார். நான் துணை முதல்-மந்திரியாக இருந்தேன். பல்வேறு சங்கடங்களை சந்தித்து துணை முதல்-மந்திரி பதவியை நிர்வகித்தேன். எங்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தபோதும், குமாரசாமிக்கு நாங்கள் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. அவர் 20 மாதங்கள் ஆட்சி செய்தார்.

ஆனால் ஒப்பந்தப்படி முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க குமாரசாமி மற்றும் அவரது கட்சி தயங்கியது. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே முதல்-மந்திரி பதவியை எனக்கு வழங்கினார். குமாரசாமி மற்றும் தேவேகவுடா இருவரும் பல்வேறு ஷரத்துகளை விதித்தனர். அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு நான் முதல்-மந்திரி பதவியை ஏற்றேன். ஆனால் என்னை அந்த பதவியில் நீடிக்க குமாரசாமி விடவில்லை. எனக்கு பல தொல்லைகளை கொடுத்தனர்.

இதையடுத்து ஒரே வாரத்தில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை வீசி எறிந்தேன். மீண்டும் மக்களை சந்தித்தோம். 110 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. சிலரது ஆதரவுடன் 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தை பா.ஜனதா பூர்த்தி செய்தது. நம்பிக்கை துரோகம் என்பது குமாரசாமியின் ரத்தத்தில் ஊறிப்போய் உள்ளது. இப்போது காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை குமாரசாமி நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

அப்போது குமாரசாமி குறுக்கிட்டு, “நரம்பு இல்லாத நாக்கினால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து நீங்கள் பேசுகிறீர்கள். இப்படி வாய்க்கு வந்தபடி பேசுவது சரியல்ல. எனக்கும் குரலை உயர்த்தி ஆக்ரோஷமாக பேசத்தெரியும். நான் அவ்வாறு பேச விரும்பவில்லை. கட்டுப்பாட்டுடன் பேசுங்கள். தரம்சிங் முதல்-மந்திரி பதவியை இழந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு தான் இறந்தார். அதனால் அவருடைய சாவுக்கும், ஆட்சி அதிகாரம் பறிபோனதற்கும் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்துவது சரியல்ல. நான் முன்பு முதல்-மந்திரி பதவியை ஏற்றதும் தரம்சிங்கிடம் சென்று ஆசி பெற்றேன். அவர் என்னை தனது மகனை போல் பாவித்து ஆசிர்வாதித்தார்“ என்றார்.

அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் எதிர்ப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Next Story