மாவட்ட செய்திகள்

குப்பை வரி விதிப்புக்கு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு, அ.தி.மு.க. வெளிநடப்பு + "||" + MLAs protest against trash tax AIADMK walkout

குப்பை வரி விதிப்புக்கு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு, அ.தி.மு.க. வெளிநடப்பு

குப்பை வரி விதிப்புக்கு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு, அ.தி.மு.க. வெளிநடப்பு
குப்பைக்கு வரி விதிக்கப்பட்டதற்கு சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க.வினர் வெளிநடப்பும் செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–

அன்பழகன்: புதுச்சேரி மாநிலத்தில் எந்தெந்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளுக்கு குப்பைக்கான வரி எந்த அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது? இதன் மூலம் அரசுக்கு ஒரு மாதத்துக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு?

அமைச்சர் நமச்சிவாயம்: புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகி, ஏனாம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கான நுகர்வோர் கட்டணம் உள்ளாட்சித்துறையின் குறிப்பாணை மூலம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் புதுச்சேரி நகராட்சிக்கு ரூ.17.50 லட்சமும், உழவர்கரை நகராட்சிக்கு ரூ.22.75 லட்சமும், காரைக்காலுக்கு ரூ.7.75 லட்சமும், மாகிக்கு ரூ.6.25 லட்சமும், ஏனாமுக்கு ரூ.4.41 லட்சமும் வருவாய் கிடைக்கும்.

அன்பழகன்: ஏற்கனவே பல வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் குப்பைக்கு புதிய வரி தேவையா? இதற்காக ஆண்டுக்கு ரூ.24 கோடி செலவிடுகிறோம். குப்பைக்கு வரி விதிப்பது தொடர்பாக எம்.எல்.ஏ.க்களிடம் ஏன் கருத்து கேட்கவில்லை? வீட்டுவரி, சொத்துவரி ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்த்தலாம். ஆனால் 300 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் நமச்சிவாயம்: கடந்த 13 வருடங்களாக வரிகள் உயர்த்தப்படவில்லை.

அன்பழகன்: அது யார் தவறு? வருடாவருடம் உயர்த்தி இருக்கவேண்டும். ஆட்சியில் இருந்தவர்கள் ஓட்டுக்காக உயர்த்தாமல் இருந்திருப்பார்கள்.

சிவா (தி.மு.க.): இந்த வரி உயர்வுகளால் மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். அமைச்சர் வரி வசூலை நிறுத்த சொன்னார். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து வசூலித்துக்கொண்டுதான் உள்ளனர்.

எம்.என்.ஆர்.பாலன் (காங்): வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான். ஆனால் அதற்காக புதுவையில் வரி வசூலித்து ஏனாமில் சுய உதவி குழுக்களுக்கு கொடுக்கக்கூடாது.

பாஸ்கர் (அ.தி.மு.க.): இப்போது குப்பை வரி செலுத்தினால்தான் வீட்டு வரியையே வாங்குகிறார்கள்.

வையாபுரி மணிகண்டன் (அ.தி.மு.க.): குப்பைக்கு வரி போட்டு உள்ளீர்கள். எத்தனை குப்பை தொட்டி வைத்துள்ளீர்கள்?

ஜெயமூர்த்தி (காங்): குப்பைக்கு வரி போட்ட முதல் மாநிலம் நாம்தான். அதனை உடனடியாக நீக்க வேண்டும்.

அரசு கொறடா அனந்தராமன்: வரி ஏற்றம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது. எனவே வரியை குறைக்கவேண்டும்.

லட்சுமிநாராயணன் (காங்): சொத்துவரி உயர்வினாலும் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

அமைச்சர் நமச்சிவாயம்: சொத்துவரியை 100 சதவீதம் உயர்த்தி உள்ளோம். 500 சதுர அடிக்கு குறைந்த வீடுகளுக்கு வரியை உயர்த்தவில்லை.

சிவா: முன்பு ரூ.1000 வீட்டுவரி செலுத்தியவர்களுக்கு இப்போது ரூ.4 ஆயிரம் வந்துள்ளது. இது எத்தனை சதவீதம்?

அமைச்சர் நமச்சிவாயம்: இதுதொடர்பாக துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். முதல்–அமைச்சரிடம் கலந்துபேசி அறிவிப்போம்.

சிவா: ஏற்கனவே அரசு கெட்ட பெயரில் போகிறது. இதையும் குறைக்காவிட்டால் இன்னும் கெட்ட பெயர் ஏற்படும்.

அன்பழகன் வரி உயர்வு, குப்பைக்கு வரி போட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் சட்டசபையிலிருந்து வெளியேறினார்கள். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர்கள் மீண்டும் சட்டசபைக்குள் வந்தனர்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி: வரி தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கலாம். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டியுள்ளது.

சிவா: வரி உயர்வு என்றால் ஏன் யாருக்கும் தெரியாமல் செய்கிறார்கள்? அதை சபையில் அறிவிக்க வேண்டியதுதானே. இதில் முதல்–அமைச்சர், அமைச்சரின் பதில் சரியில்லை.

அன்பழகன்: முதல்–அமைச்சர், அமைச்சரின் பதிலில் திருப்தியில்லை. 15 நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கே பதில் இல்லை. இன்னும் என்ன கலந்துபேச வேண்டியுள்ளது. என்ன நிர்வாகம் செய்கிறீர்கள்?

அமைச்சர் நமச்சிவாயம்: பதில் கேட்டு நீங்கள் இவ்வாறெல்லாம் நிர்ப்பந்திக்க கூடாது.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு அமைச்சர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதில் அளிக்கும்போது தெரிவிப்பார் என்று கூறி அடுத்த அலுவலுக்கு சென்றார்.