திருத்தங்கல்லில் முன் விரோத தகராறில் வாலிபர் கொலை


திருத்தங்கல்லில் முன் விரோத தகராறில் வாலிபர் கொலை
x
தினத்தந்தி 10 July 2018 3:30 AM IST (Updated: 10 July 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கல்லில் முன் விரோத தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

சிவகாசி,

சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய சாட்சியாபுரம் ரோட்டைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62). தையல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரமேஷ்குமார், அசோக்குமார், சுரேஷ்குமார், சதீஷ்குமார் ஆகிய 4 மகன்கள். இவர்களில் சதீஷ்குமாரை தவிர மற்றவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. சதீஷ்குமார் புத்தகம் பைண்டிங் செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சதீஷ்குமாரிடம் திருத்தங்கல் பசும்பொன்நகரை சேர்ந்த முனியசாமி என்கிற சாம்பார் முன்விரோதம் காரணமாக தகராறு செய்துள்ளார். இதில் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அருகில் இருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர்

இந்த நிலையில் நேற்று மதியம் கீழத்திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியில் சதீஷ்குமார் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த 7 பேர் கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் மீது ஒரு கல்லை எடுத்து போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை தொடர்பாக சதிஷ்குமாரின் தந்தை மாரியப்பன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் முனியசாமி என்கிற பொசுங்கன், அந்தோணி, மருதுபாண்டி, முனியசாமி, வண்டு மாரீஸ்வரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராஜன், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் ஆகியோரும் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்று வருவது அந்த பகுதியில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


Next Story