26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் 136 பேர் கைது


26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் 136 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 4:30 AM IST (Updated: 10 July 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் சாலை மறியல் போராட்டம் நடத்திய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 136 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் கடந்த 3-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஊராட்சி செயலாளர்களுக்கும், பதிவுறு எழுத்தருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்துவது அவசியம். பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்த விதமான விளக்கமும் கோராமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தபோராட்டம் நடக்கிறது.

இதைத் தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடுத்த கட்ட போராட்டமாக ஜூலை 9-ந் தேதி (அதாவது நேற்று) கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் செய்ய போவதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக ஏராளமான அலுவலர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து அனைவரும் பலத்த கோஷங்களை எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் முன் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுமதி, செயலாளர் ராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பகவதியப்பபிள்ளை, செயலாளர் லீடன்ஸ்டோன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சாலை மறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மறியல் போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.பெண்கள் உள்பட மொத்தம் 136 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று தங்கவைத்தனர்.

போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தற்போது வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். இனியும் எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்று கொள்ளவில்லை எனில் அடுத்த கட்டமாக வருகிற 12-ந் தேதி சென்னையில் பேரணி நடத்துவோம். அதுவரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும்‘ என்றனர். 

Next Story