30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 10 July 2018 4:30 AM IST (Updated: 10 July 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை தொடர்ந்து நாகை அவுரித்திடலில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கஜபதி, தமிழ்செழியன், குமார், ஆடியபாதம், சுரேஷ்கண்ணன், ராஜா, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் சிவக்குமார், துணை தலைவர் பிரகாஷ் ஆகியோர் பேசினர். இதில் வட்ட நிர்வாகிகள் முருகையன், தியாகு, ரவிச்சந்திரன், பாலதண்டாயுதம், ரமணராம், பூமாலை, கோபாலகிருஷ்ணன், மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தை சேர்ந்த பழனிவேல் நன்றி கூறினார்.

போராட்டத்தில் பொது வினியோகத்திட்டத்திற்கு தனித்துறை அமைக்கப்பட வேண்டும். கூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் பணியாளர்களின் முன்பு கட்டுப்பாட்டு பொருள்கள் அனைத்தும் எடையிட்டு வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி பணிவரன்முறை செய்ய வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்கள் அவர்கள் வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரிபாதி ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கட்டுபாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்பந்திக்கக்கூடாது. 500 குடும்ப அட்டைகளுக்குமேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும்.

மின்னணு குடும்ப அட்டை வழங்கிய பிறகும் கடந்த மாத விற்பனையை நடப்புமாத ஓதுக்கீடாக வழங்குவது ஏற்புடையதல்ல, எனவே நியாய விலைக்கடைகளில் உள்ள கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். விற்பனை முனையம் மற்றும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட நிலையில் 100 சதவீதம் தணிக்கை முறையினை ரத்து செய்ய வேண்டும். மேலும், மாத இறுதியில் விற்பனை செய்வதை போலி பதிவென ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும், கூட்டுறவு நிறுவனங்களில் கோரப்படும் மானியம் முழுவதும் அரசு வழங்கிட வேண்டும். அரசு வழங்கும் மானியத்தை தனி கணக்கில் வரவு வைத்து பொது வினியோகத்திட்ட பணிகளுக்கு மட்டும் செலவிடும் முறையை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நியாயவிலைக்கடை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால் நேற்று ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story