குடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது


குடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 3:45 AM IST (Updated: 10 July 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது35). இவரது மனைவி ஈஸ்வரி (30). இந்நிலையில் மாயாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி ஈஸ்வரியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி கோபித்துக்கொண்டு அன்னவாசல் மேட்டு தெருவில் உள்ள தனது தந்தை சின்னத்தம்பி (65) வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் மாயாண்டி தனது மாமனார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த மாயாண்டி அவரது மனைவி ஈஸ்வரியை அங்கு கிடந்த அரிவாளால் மண்டையின் பின் பகுதியில் வெட்டினார். இதனால் ஈஸ்வரி படுகாய மடைந்து மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரின் தந்தை சின்னதம்பி, மாயாண்டியை தட்டி கேட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மாயாண்டி, சின்னதம்பியை கீழே தள்ளி விட்டார். இதனால் சின்னதம்பி தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் படுகாயமடைந்த ஈஸ்வரி மற்றும் சின்னதம்பியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரி அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தார். 

Next Story