மாவட்ட செய்திகள்

தண்ணீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு + "||" + Water harvesting has increased to 35 thousand cubic feet due to floods in Hogenakkal

தண்ணீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தண்ணீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து நேற்று வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்துள்ளது.
பென்னாகரம்,

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட உபரிநீர் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர்.


பிலிகுண்டுலு பகுதியில் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் நேற்று 2-வது நாளாக தடை விதித்தது. ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சிவனருள் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று (நேற்று) காலை 9.30 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஒகேனக்கல் பகுதியில் உள்ள அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல்கள் இயக்கமும் தடை செய்யப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்து மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும்.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கப்படுகிறது. ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு தொடர்பான நிலவரங்களை கண்காணிக்கும் பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு உதவி கலெக்டர் சிவனருள் கூறினார்.

கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 9-ந்தேதி காலை அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 14 ஆயிரத்து 334 கனஅடியாக அதிகரித்தது. மாலையில் மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 65.15 அடியாக உயர்ந்து உள்ளது. தற்போது கர்நாடகத்தில் பெய்து வரும் மழையின் அளவு மேலும் அதிகரித்து இருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு நீடித்தால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 100 அடியை எட்டி பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதை நம்பி உள்ள பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...