கனமழையால் பில்லூர் அணை நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது பவானி ஆற்றில் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு


கனமழையால் பில்லூர் அணை நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது பவானி ஆற்றில் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 10 July 2018 10:30 PM GMT (Updated: 10 July 2018 7:00 PM GMT)

கனமழையால் பில்லூர் அணை நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்ததால் அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையம்,

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரளா சென்று பின்னர் கோவை மாவட்டம் அத்திக்கடவு அருகே மீண்டும் தமிழகத்துக்குள் வந்து சேருகிறது. அந்த இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே பில்லூர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 100 அடி ஆகும்.

கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் பில்லூர் அணை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் வந்த தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்தது. இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பில்லூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது. மின் உற்பத்திக்காக அணையில் உள்ள 2 எந்திரங்களை இயக்கியதன் மூலம் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது.

இதற்கிடையே, அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 96 அடியாக அதிகரித்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து ஆற்றுக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், அணை எந்த நேரத்திலும் நிரம்ப வாய்ப்பு உள்ளது. எனவே அணையில் இருந்து எந்த நேரத்திலும் 4 மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. தற்போது அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் நேற்று 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பாலம் அருகே இருக்கும் பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆற்றின் கரையோரத்தில் உள்ள தேக்கம்பட்டி, நெல்லிதுறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் மேடான பகுதிக்கு செல்லுமாறு தண்டோரா மூலமும், ஆட்டோவில் ஒலி பெருக்கி வைத்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படியும் மேட்டுப்பாளையம் தாசில்தார் புனிதா கேட்டுக்கொண்டு உள்ளார். இதற்கிடையே கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருவதால், பில்லூர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே அணை எந்த நேரத்திலும் நிரம்ப வாய்ப்பு உள்ளதால், மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

அணை நிரம்பி விட்டால், அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் ஆற்றுக்கு திறந்து விடப்படும். எனவே ஆற்றங்கரை ஓரத்தில் வசித்து வரும் பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ அல்லது ஆற்றில் இறங்கி குளிக்கவோ முயற்சிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story