மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு வாழ்நாள் சிறை


மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு வாழ்நாள் சிறை
x
தினத்தந்தி 10 July 2018 11:00 PM GMT (Updated: 10 July 2018 8:04 PM GMT)

அகதிகள் முகாமில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா இரும்பூதிப்பட்டியிலுள்ள அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் என்கிற ராஜ்குமார்(வயது 32). லாரி டிரைவர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டில் 38 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனியாக இருந்தார். இந்த நிலையில் ராஜ்குமார் அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை வெளியே அழைத்து வந்தார். பின்னர் அங்குள்ள காட்டுப்பகுதியில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் உடலில் காயங்களுடன் அந்த பெண் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசாரித்த போது, ராஜ்குமார் தகாத முறையில் நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது கரூர் மாவட்ட மகளிர் விரைவுநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்ததால் நேற்று நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி ராஜ்குமார் நுழைந்ததற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் ராஜ்குமாருக்கு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசார், ராஜ்குமாரை வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் அதிகபட்ச தண்டனையான வாழ்நாள் சிறை தண்டனையை ராஜ்குமார் அனுபவிப்பார். வாழ்நாள் சிறை என்பதால் தலைவர்கள் பிறந்த நாளின் போது விடுதலை உள்ளிட்டவற்றின்கீழ் தப்பிக்க முடியாது. பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என இந்த வழக்கில் அரசு தரப்பு வழக் கறிஞராக ஆஜராகி வாதாடிய தாட்சாயிணியிடம் கேட்டபோது தெரிவித்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story