அத்திப்பட்டு புதுநகரில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்தம்
அத்திப்பட்டு புதுநகரில், லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி டேங்கர் லாரி உரிமையாளர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து தினந்தோறும் 500–க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யப்படுகிறது. ஆந்திரா, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள், லாரி வாடகையை உயர்த்தி தரவேண்டும் என்று ஒப்பந்த நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுபற்றி ஒப்பந்த நிறுவனங்கள் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இதையடுத்து வருகிற 20–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருந்தனர்.
இதற்கிடையே லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி நேற்று முன்தினம் காலை திடீரென டேங்கர் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்வது முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இவர்களது வேலை நிறுத்த போராட்டம் 2–வது நாளாக தொடர்ந்தது. போராட்டம் தொடரும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.