மாவட்ட செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 8-வது நாளாக வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் + "||" + Rural Development Officers participated in the strike for 8th day

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 8-வது நாளாக வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 8-வது நாளாக வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
நாகை, கீழையூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று 8-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 8-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 8-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.


ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.

ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர் களுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்.

முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மகளிர்குழு அமைப்பாளர் ஜம்ருத்நிஷா, வட்டார தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் வளர்மாலா, பொருளாளர் மணிவண்ணன், மாவட்ட துணை தலைவர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் சரவண பெருமாள், ஓவர்சீயர் சங்க மாவட்ட செயலாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டார தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜோதிமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நாகை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து 8 நாட்களாக பணிக்கு வராததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பணிகள் நிமித்தமாக வரும் பொதுமக்களும் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...