பெஸ்ட் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது


பெஸ்ட் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 9:33 PM GMT (Updated: 10 July 2018 9:33 PM GMT)

பெஸ்ட் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை,

மும்பை பரேல் பகுதியை சேர்ந்த பெண் பவன்பென்(வயது68). இவர் சம்பவத்தன்று சாவேரி பஜார் பகுதிக்கு தங்க நகைகள் வாங்கவும், பழைய நகைகளுக்கு பாலிஷ் போடவும் சென் றார். இதில், நகைகள் வாங்கிய பிறகு அவர் பெஸ்ட் பஸ் மூலம் பரேல் வந்தார். அவர் வீட்டிற்கு வந்தவுடன் கைப்பையை பார்த்தபோது, அது பாதி திறந்தநிலையில் இருந்தது. மேலும் கைப்பைக்குள் இருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தன.

இதனால் பதறிப்போன அவர் சம்பவம் குறித்து பைதோனி போலீசில் புகார் அளித்தார். மேலும் அவர், பஸ்சில் தனக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி, அவரின் அடையாளங்களையும் கூறினார்.

அந்த அடையாளங்களை வைத்து போலீசார் சாவேரி பஜார் பஸ் நிலையம் அருகே சுற்றித்திரிந்த வாசிம் சேக் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிராம்பேயில் உள்ள வாசிம் சேக்கின் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இருந்து வாசிம் சேக், பவன்பென்னிடம் திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வாசிம் சேக்கை கைது செய்தனர்.

Next Story