சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்: கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு


சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்: கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 July 2018 4:15 AM IST (Updated: 11 July 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். விசாரணை கைதிகள் போல தங்களை நடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பசுமை சாலை அமைக்க பல்வேறு கிராம மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் சாலை அமைய உள்ள 36 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி நிறைவு பெற்று உள்ளது. இந்த திட்டம் குறித்த ஆட்சேபனை இருந்தால் 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 6-ந்தேதி அலகு 1-க்கு உட்பட்ட கிராம மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த நிலையில் அலகு 3-க்கு உட்பட்ட கிராம மக்களுக்கான கருத்து கேட்பு சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. அடிமலைப்புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, ஆகிய பகுதி விவசாயிகள், நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு தனித்தனியாக விவசாயிகளை சந்தித்து குறைகள் மற்றும் கருத்துகளை கேட்டனர்.

கூட்டத்தில் கலந்து கொள்ள குப்பனூர் பகுதியை சேர்ந்த 30 விவசாயிகள், நில உரிமையாளர்கள் சென்றனர். நிலப்பிரிவு தாசில்தார்கள் வெங்கடேசன், பெலிக்ஸ் ராஜா ஆகியோர் விவசாயிகள், நில உரிமையாளர்களிடம் சென்று கருத்து கேட்பு கூட்டத்துக்காக அமர்ந்து உள்ள அதிகாரிகளிடம் தனித்தனியாக சென்று தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றனர்.

அதற்கு விவசாயிகள் தனித்தனியாக கருத்து கூற நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு அதிகாரி வந்து பொதுவான கருத்து கேட்க வேண்டும் என்று கூறினார்கள். இதற்கு அதிகாரிகள் தனித்தனியாக கருத்துகளை கேட்பதற்காக தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே நீங்கள் அதிகாரிகளை சந்தித்து தனித்தனியாக உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றனர்.

இதற்கு விவசாயிகள், நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நாங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை. எங்களுடைய ஒட்டுமொத்த கருத்துகளையும் அதிகாரிகள் கேட்க மறுக்கிறார்கள். எனவே இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர். அப்போது திருமண மண்டபத்துக்கு வெளியே வந்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை தர மாட்டோம் என்று கோஷமிட்டனர். அப்போது விவசாயிகள் கூறும் போது, கருத்து கேட்பு கூட்டத்துக்கு வரும் விவசாயிகள், நில உரிமையாளர்களை ஒரு விசாரணை கைதியை போல சோதனை நடத்தி தான் அனுமதிக்கின்றனர். தனித்தனியாக கருத்துகளை தெரிவிப்பதால் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிப்பவர்களை அதிகாரிகள் மிரட்ட வாய்ப்பு உள்ளது என்றனர்.

இது குறித்து குப்பனூரை சேர்ந்த நாராயணன் கூறியதாவது:-

8 வழி பசுமை சாலைக்காக மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று(அதாவது நேற்று) நடைபெறுகிறது என்று தபால் கொடுக்கப்பட்டது. இங்கு கூட்டத்திற்கு வந்தால் எங்களை அதிகாரிகள் தனித்தனியாக சென்று அதிகாரிகளிடம் குறைகளை கூற வேண்டும் என்று கூறினார்கள். பொதுவான மக்கள் கருத்து கேட்க வரவில்லை என்பதால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். தமிழக முதல்-அமைச்சர் தென்னை மரத்திற்கு ரூ.40 ஆயிரம் என்றும், சேலம் மாவட்ட கலெக்டர் தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரம் என்றும், திருவண்ணாமலை கலெக்டர் தென்னை மரத்திற்கு ரூ.80 ஆயிரம் என்றும் கூறி உள்ளார்கள். அரசு ஆணையை முறையாக வெளியிடவில்லை. நிலத்திற்கு ரூ.21 லட்சம் முதல் ரூ.9½ கோடி வரை தருவதாக கூறினார்கள். ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் மதிப்பீடு தொகை எவ்வளவு என்று வெளியிட வேண்டும். இதற்காக அரசு ஆணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள். போலீஸ் துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் தலைமையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story