4 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்பு: மழை நிலவரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை - முதல்மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு


4 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்பு: மழை நிலவரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை - முதல்மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2018 11:15 PM GMT (Updated: 10 July 2018 10:27 PM GMT)

மும்பையில் மேலும் 4 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்ப தால் மழை நிலவரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

நாக்பூர்,

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இந்த நிலையில் நாக்பூரில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் இதுகுறித்து பேசியதாவது, ‘மும்பையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக பால்கர் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். சுமார் 40 கிராமங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை காப்பாற்ற அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை தெரிவிக்கவேண்டும்’ என்றார்.

இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

பால்கர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்துள்ளது. அங்கு பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பால்கர் மாவட்ட நிர்வாகத்திடம் மக்களை காப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை விரைவாக செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மும்பை நகரத்தை பொறுத்தவரையில் 11 இடங்களில் அதிகப்படியான மழைவெள்ளம் தேங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 3 பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வசாய்- விரார் பகுதிகளில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் புறநகர் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கடற்கரையோர பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் பம்புகள் மூலம் முழுவீச்சில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 150 பம்புகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் எந்த விதத்திலும் நெருக்கடியை சந்தித்துவிட கூடாது என்பதற்காக, மாநில அரசு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழை நிலவரத்தை பொறுத்து, தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story