திருப்பூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


திருப்பூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 July 2018 4:53 AM IST (Updated: 11 July 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட வேலம்பாளையம்-சிறுபூலுவப்பட்டி ரிங் ரோடு அமர்ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தங்கள் பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

கலெக்டர் ஆய்வு செய்வதற்காக வெளியூர் சென்றதால் கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்திக்க பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே செல்லுமாறு கூறினார்கள். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாசல் மற்றும் படிக்கட்டில் அமர்ந்து இருந்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாதனைக்குறளை சந்தித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என்று ஏற்கனவே மனு கொடுத்த பின்பும், தற்போது அமர்ஜோதி கார்டன் ஜவகர்நகர் ரோட்டில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு கட்டுமான பணிகள் நடக்கிறது. பள்ளிகள், மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ள அங்கு டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்கள். டாஸ்மாக் கடை அங்கு அமையாது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அமர்ஜோதி கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தினர் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலால் உதவி ஆணையாளரிடம் மனு கொடுத்து முறையிட்டனர். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை அமையாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறினார்கள்.

Next Story