ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஜீயர் மரணம் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஜீயர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீராமனுஜ மடத்தின் 50–வது ஜீயராக ஸ்ரீரங்க நாராயணன் இருந்து வந்தார். ஸ்ரீரங்கம் கோவில் ஜீயர் ஆவார். அவருக்கு வயது 89. இருதய கோளாறு, சிறுநீராக பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர், கோவிலின் மடத்திலேயே தங்கி அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஜீயர் ஸ்ரீரங்க நாராயணன் மரணம் அடைந்தார்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் கைங்கர்யத்தில் தன்னை பூரணமாக ஆட்படுத்திக் கொண்டு 50–வது பட்டம் ஏற்ற ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் பூர்வாசிரமத்தின் ஸ்ரீவரதாச்சாரியார் என்ற இயற்பெயர் கொண்டவர். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, நயினார்பாளையம் என்ற ஊரில் சிறிய குடும்பத்தில் ஒரு வைதீக குடும்பத்தில் பாலகிருஷ்ணமாச்சாரி–சேஷலட்சுமி அம்மையாருக்கு 3.12.1929–ம் ஆண்டு மகனாக பிறந்தார்.
1959 முதல் சில ஆண்டுகள் கோயமுத்தூர் அர்ச்சகராக ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவிலில்(கொடி கோவில்) பணி செய்து வந்தார். இவருடைய மனைவி ஆதிலட்சுமி அம்மாள். இவர்களுக்கு 2 மகன், 3 மகள் உள்ளனர். 60–வது வயதில் தனது நெடுநாள் விருப்பப்படி, ஸ்ரீரங்கம் வந்து உடையவர் சன்னதியில் காஷாயம் ஏற்று, ‘ஸ்ரீரங்க நாராயண ஜீயர்’ என்ற பட்டம் பெற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீராமானுஜ மடத்தின் 50–வது ஜீயராக அலங்கரித்து வந்தார். ஸ்ரீரெங்கநாதரின் அருட்பணியில் தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொண்ட ஜீயர் சுவாமிகள், கோவிலில் ரெங்கன் சேவையில் புணுகுகாப்பு சாற்றும்போது திருவாலவட்டம்(விசிறி வீசுதல்) கைங்கர்யம், திருவாராதனம், கோஷ்டிகள் கைங்கர்யம் போன்ற பல கைங்கர்யங்களை செய்து வந்தார்.
ரெங்கனின் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஜீயர் சுவாமிகள், ஸ்ரீராமானுஜர் மடத்தை சிறப்புற பொலிவு பெற செய்து வந்தார். மடத்துக்கு வருகை தரும் அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றியும், ரெங்கனின் சேவைகளில் அடியார்களை ஈடுபடுத்தியும் அனைவரின் அன்பிற்கும், பக்திக்கும் உரியவராக விளங்கி ஸ்ரீவைணவத்திற்கு பெருந்தொண்டு ஆற்றி வந்துள்ளார்.
மரணம் அடைந்த ஜீயர் ஸ்ரீரங்க நாராயணன் உடல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வடக்கு வாசலில் உள்ள மடத்தில் பக்தர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர் உடலை பக்தர்கள், பொதுமக்கள் வணங்கி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு அவரது திருமேனிக்கு திருமஞ்சனமும், காலை 11.30 மணிக்கு பல்லக்கில் 4 ரதவீதிகளில் எடுத்து செல்லப்பட்டு. மாலை 3 மணிக்கு கொள்ளிடம் கரையில் உள்ள ஆளவந்தான் படித்துறை பகுதியில் பள்ளிப்படுத்துதல்(அடக்கம்) செய்யப்படும்.