தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பணம் மோசடி: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பணம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 3 பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியது. இந்த நிதியின் மூலம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட 6 மண்டல அலுவலகங்களிலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பிரிவு அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே வருங்கால வைப்பு நிதி வழங்கப்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு மீண்டும் பணத்தை வரவு வைத்து அவர்களை வரவழைத்து உங்களுடைய வங்கி கணக்கில் கூடுதலாக பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறி அவர்களிடம் அந்த பணத்தை அதிகாரிகள் ரொக்கமாக பெற்று மோசடி செய்துள்ளதும், இவ்வாறாக ஒவ்வொருவரிடமும் குறைந்தது ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை என 250-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிற நிலையில் நேற்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் யார், யார்? எவ்வளவு தொகை மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் விரைவில் தெரியவரும் என்றனர்.
Related Tags :
Next Story