ஜீப்-லாரி மோதல்: 1 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு - பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு


ஜீப்-லாரி மோதல்: 1 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு - பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 July 2018 3:00 AM IST (Updated: 12 July 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஜீப்-லாரி மோதலில் 1 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

மங்களூரு,

காசர்கோடு அருகே, ஜீப்-லாரி மோதிக் கொண்ட விபத்தில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அஜ்ஜினடுக்கா பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக்(வயது 41). இவர் தனது குடும்பத்தினர் 13 பேருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். அங்கிருந்து கடந்த 8-ந் தேதி நள்ளிரவு புறப்பட்டு, முஸ்தாக் உள்பட 13 பேரும் ஜீப்பில் காசர்கோடு வழியாக மங்களூரு நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

9-ந் தேதி காலை 6 மணியளவில் காசர்கோடு அருகே நஜாபஜார் பகுதியில் ஜீப் வந்து கொண்டு இருந்தது. அப்போது மங்களூருவில் இருந்து காசர்கோடு நோக்கி சென்ற லாரியும், ஜீப்பும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் முஸ்தாக், பாத்திமா, அஸ்மா, நசீமா, இம்தியாஸ் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 1 வயது பெண் குழந்தை பாத்திமா உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு குழந்தை பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து உப்பாளா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story