போலீசார் அதிரடி சோதனை மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 50 பேர் கைது


போலீசார் அதிரடி சோதனை மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 50 பேர் கைது
x
தினத்தந்தி 12 July 2018 3:45 AM IST (Updated: 12 July 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர் பசுபதிபாளையம், அரவக்குறிச்சி, குளித்தலை, லாலாபேட்டை உட்பட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.

தோகைமலை மணப்பாறை ரோட்டில் மொபட்டில் வந்த தோகைமலை பள்ளிவாசல் தெற்குதெருவை சேர்ந்த சண்முகம் (வயது 37) என்பவரை பிடித்து, அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். சோதனையில், அதில் மதுபாட்டில்கள் இருந்தன. அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மதுபாட்டில்களை திருச்சியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து 48 மதுபாட்டில்கள் மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மதுவிலக்கு பிரிவு சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இதே போல் கரூர் மாவட்ட போலீஸ் நிலைய போலீசாரும் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 47 வழக்குகள் பதிவு செய்து 300-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கைப்பற்றினர். கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் மொத்தம் 481 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 50 பேர் கைது செய்யப் பட்டனர். 

Next Story