புதர் காடாக மாறிய வெட்டாறு: மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


புதர் காடாக மாறிய வெட்டாறு: மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 July 2018 4:00 AM IST (Updated: 12 July 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

புதர் காடாக மாறி விட்ட வெட்டாற்றை, மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பகுதியில் விவசாய பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக திகழ்வது வெட்டாறு. இந்த வெட்டாற்றை முழுமையாக தூர்வாரி பல ஆண்டுகளாகி விட்டன. இதனால் வெட்டாற்றில் மெலட்டூரில் இருந்து தென்கரை ஆலத்தூர் வரை உள்ள பகுதி புதர் காடு போல காட்சி அளிக்கிறது.

மெலட்டூர், சுரைக்காவூர், ஒன்பத்துவேலி, திருகருக்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெட்டாற்றில் மணல் திட்டுகள் உள்ளன. மணல் திட்டுகளையும், புதர் காட்டையும் மீறி பாசன வாய்க்கால்களை தண்ணீர் சென்றடைவது கடினம் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக வெட்டாற்றை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வெட்டாறு தற்போது புதர் காடாக மாறி விட்டது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் வெட்டாற்றில் இருந்து வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லாது. இது இப்பகுதியில் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் விளை நிலங்கள் தரிசாக மாறி வருகின்றன.

வெட்டாற்றை முழுமையாக தூர்வாரி பராமரித்தால் மட்டுமே விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

Next Story