மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது - மீண்டும் கனமழை எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி


மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது - மீண்டும் கனமழை எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 12 July 2018 12:09 AM GMT (Updated: 12 July 2018 12:20 AM GMT)

மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. வசாய், விராரில் வெள்ளம் வடியாததால் மக்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.

மும்பை,

மும்பையில் 5 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை நின்று நேற்று சூரியன் தலைகாட்டியது. இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. வசாய், விராரில் வெள்ளம் வடியாததால் மக்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர்.

மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை கடந்த வெள்ளிக்கிழமை முதல் மிக தீவிரமானது. அன்று பகலில் பரவலாக மழை பெய்தாலும் இரவு முதல் வெளுத்து வாங்கியது. அதன்பின்னர் மழையின் தீவிரம் கொஞ்சம் கூட குறையவில்லை. நேற்றுமுன்தினம் வரையிலும் தொடர்ந்து விடாமல் பெய்துகொண்டே இருந்தது. கொட்டி தீர்த்த இந்த பேய் மழை மாநில தலைநகரமான மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களை திணறடித்து விட்டது.

நகர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தன. கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நீர் ஆதாரங்களான ஏரிகள், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

குறிப்பாக மும்பை பெருநகரத்துக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான துல்சி நிரம்பியது. இதுதவிர சில அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. மும்பை, தானே, பால்கர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந் தன. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போக்குவரத்து உயிர்நாடியான ரெயில் சேவைகளும் ஸ்தம்பித்தன. நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் மற்றும் நீண்டதூர ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. விமான போக்குவரத்தும் தாமதமானது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மக்களும் பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். மழைக்கு உயிர் பலிகளும் ஏற்பட்டன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து, மழையின் தீவிரம் குறைந்தது. நேற்று காலையில் மழை முழுமையாக நின்றது. இதையடுத்து, மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. 5 நாட்களுக்கு பின் சூரியனின் வெளிச்சத்தை மும்பை மக்கள் பார்த்தனர். மழை நின்றதை தொடர்ந்து, சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்தது. வாகன போக்குவரத்தும் சீரானது. ஆனால் சாலைகள் பல பல்லாங்குழியாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் திண்டாடினர்.

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் தண்டவாளங்களை சூழ்ந்த வெள்ளமும் வடிந்ததை அடுத்து ெரயில் போக்குவரத்து சீரடைய தொடங்கியது. சில இடங்களில் ரெயில்கள் வேக கட்டுப்பாடுடன் மெதுவாகவே இயக்கப்பட்டன. சில ரெயில்கள் தாமதமாக இயங்கின.

கனமழை வெள்ளத்தின் காரணமாக பால்கர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வசாய், விரார் பகுதிகளில் குடியிருப்புகளையும், சாலைகளையும் சூழ்ந்த வெள்ளம் வடியாமல் தேங்கியே நிற்கிறது. எனவே மழை நின்றாலும் அந்த பகுதிகள் தொடர்ந்து வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கின்றன. அந்த பகுதி மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.

மின்சாரம் இல்லாததால் இரவில் தூங்க முடியாமல் கொசு தொல்லையால் அவதி அடைந்தனர். செல்போனுக்கு சார்ஜ் போட கூட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த விரார்- வசாய் நகரங்களில் மின்வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டு உள்ளது. இணையதள சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள நாலச்சோப்ரா ரெயில் நிலையத்தில் சூழ்ந்த வெள்ளம் கொஞ்சம், கொஞ்சமாக வடிந்தது. இதையடுத்து, சர்ச்கேட்- விரார் இடையேயும், விரார்- தகானு இடையேயும் ரெயில் சேவைகள் தொடங்கப்பட்டன. இருப்பினும் மின்சார ரெயில்கள் சீராக இயங்கவில்லை. விராரில் இருந்து சர்ச்கேட்டிற்கு 30 நிமிடம் மற்றும் ஒரு மணி நேர இடைவெளியில் தான் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. மேற்கு ரெயில்வே நேற்றும் பல நீண்டதூர ரெயில்களை ரத்து செய்திருந்தது. மேலும் சில ரெயில்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டன.

மும்பையை பொறுத்தவரை கடந்த 5 நாட்களில் 86 செ.மீ. மழை பெய்து இருப்பதாகவும், இது சராசரியாக ஒரு மாத காலத்தில் பெய்யும் மழை அளவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மழை நின்ற போதிலும் மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் சனிக்கிழமை வரை கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை பிரிவு சார்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 5 நாட்கள் கொட்டித் தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் கனமழை எச்சரிக்கையால் பீதி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே நாக்பூர் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட மும்பை புறநகர் மாவட்ட பொறுப்பு மந்திரி வினோத் தாவ்டே நேற்று அவசரமாக மும்பை திரும்பினார். மழை வெள்ள நிவாரண பணிகளை முடுக்கி விடவும், மீண்டும் கனமழை பெய்தால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story