தனியார் வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தால் குமரியை சேர்ந்த 3 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்


தனியார் வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தால் குமரியை சேர்ந்த 3 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்
x
தினத்தந்தி 12 July 2018 10:15 PM GMT (Updated: 12 July 2018 9:57 PM GMT)

தனியார் வன பாதுகாப்பு சட்ட திருத்தத்தால் குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கூறினர்.

நாகர்கோவில்,

குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் ஆகியோர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தனியார் வன பாதுகாப்பு சட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளாக குமரி மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. எனவே இந்த மாவட்டத்தை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட முடியாமலும் தவித்து வந்தார்கள். இதுதொடர்பாக பிரின்ஸ் எம்.எல்.ஏ. கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததால், அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா, கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் உள்பட 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அந்த குழுவிடம் தனியார் வன பாதுகாப்பு சட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்களை விற்க, வாங்க, மரங்கள் வெட்டுவது தொடர்பாக மனு அளித்தால் அவர்கள் 60 நாட்களுக்குள் முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அளிக்கப்பட்ட 1,700 மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அப்போது பேசிய பிரின்ஸ் எம்.எல்.ஏ. தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், தனியார் வன பாதுகாப்பு சட்டத்தால் மக்கள் படும் வேதனைகளையும் எடுத்துக் கூறினார்.

அதைத்தொடர்ந்து கடந்த 9-ந் தேதி தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனியார் வன பாதுகாப்பு சட்ட திருத்தம் அன்றைய தேதி முதல் நடைமுறைப்படுத்த முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார் என்று சட்டசபையில் அறிவித்தார். இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குமரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். அதற்காக முதல்-அமைச்சருக்கும், வனத்துறை அமைச்சருக்கும் குமரி மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

ஏ.வி.எம். கால்வாய் கேரள மாநிலம் பூவாரில் தொடங்கி குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூரில் முடிவடைகிறது. குமரி மாவட்டத்தில் நீரோடித்துறை முதல் மண்டைக்காடு புதூர் வரை மொத்தம் நீளம் 27 கி.மீ. ஆகும். இந்த கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்யாறு இடதுகரை கால்வாய் மூலம் குமரி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தண்ணீர் செல்லும் இந்த கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளாலும், முட்புதர் மண்டியும் கிடக்கிறது. இதுதொடர்பான வழக்கு மத்திய நீர்பகிர்வு ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடித்து தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் பேசியுள்ளோம். நாங்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று இந்த வழக்கில் விரைவான தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். பேச்சிப்பாறை அணையை உடனடியாக தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையை மேலும் 7 அடிக்கு உயர்த்த வேண்டும். அரசு ரப்பர் கழகம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் உருவாக்கப்பட்டது. அதனை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கூறினர்.

பேட்டியின்போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், கே.டி.உதயம் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story