கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா


கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா
x
தினத்தந்தி 13 July 2018 5:09 AM IST (Updated: 13 July 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மாநில அரசு பதில் அளிக்காததை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் நேற்று கூட்டத்தின் தொடக்கத்தில் கேள்வி நேரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர்கள் அருண் சகாப்புரா, எஸ்.வி.சங்கனூர் ஆகியோர் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு மாநில அரசு பதிலளிக்க 10 நாட்கள் காலஅவகாசம் கேட்டு இருப்பதாக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறினார். இதற்கு அருண் சகாப்புரா, எஸ்.வி.சங்கனூர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் எழுந்து, “புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து பதிலளிக்க அரசு காலஅவகாசம் கேட்டுள்ளது. உடனே பதில் சொல்லுங்கள் என்றால் எப்படி?“ என்றனர். அதை பா.ஜனதா உறுப்பினர்கள் ஏற்கவில்லை. இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் உண்டானது.

அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் மேல்-சபை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் அவர்கள் பேசியபடி இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மந்திரி ஜெயமாலா, தர்ணா போராட்டத்தில் ஈடுபடும்போது, பேசுவது சரியல்ல. இதற்கு சபை தலைவர் அனுமதிக்கக்கூடாது“ என்றார்.

உடனே சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, “தர்ணாவில் ஈடுபட்டுள்ளவர்கள் பேசக்கூடாது. தொடர்ந்து பேசினால் இந்த சபையை விட்டு வெளியேற்றுவேன்“ என்று எச்சரிக்கை விடுத்தார். ஆயினும் பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து பேசியபடி இருந்தனர். இந்த சபை கூட்டம் இன்றோடு நிறைவடைவதால், இன்றே(நேற்று) உணவு இடைவேளைக்கு பிறகு பதிலளிக்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் பிடிவாதமாக கூறினர்.

மீண்டும் பேசிய சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, “புதிய ஓய்வூதிய திட்டம் குறித்த கேள்விக்கு பதில் பெற்று கொடுப்பதாக மந்திரி சா.ரா.மகேஷ் கூறி இருக்கிறார். இதை ஏற்று பா.ஜனதா உறுப்பினர்கள் இருக்கைக்கு திரும்ப வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டார். அப்போது பா.ஜனதா உறுப்பினர் ரகுநாத் மல்காபுரே எழுந்து, “சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைக்க வேண்டும். தங்களின் அலுவலகத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைத்து பேசி சபையை சுமுகமாக நடத்த முடிவு எடுக்க வேண்டும்“ என்றார். இதை சபை தலைவர் ஏற்க மறுத்துவிட்டார்.

ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், சபையை ஒத்திவைக்க கூடாது என்றும், 10 நாட்களில் பதில் அளிப்பதாக மந்திரி உறுதி அளித்துள்ளார் என்றும் கூறினர். சபை தலைவர், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து நாளையே(இன்று) சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அழைத்து பேசி தீர்வு காணுங்கள் என்று மந்திரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு இருக்கைக்கு திரும்பினர். 

Next Story