தொழில் அதிபர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


தொழில் அதிபர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 13 July 2018 10:15 PM GMT (Updated: 13 July 2018 7:17 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்த தொழில்அதிபர்கள் நசீர்உசேன் (வயது 24), ஜோயால்சொரூப்(25) மற்றும் மேகாதிரிஷா(22) ஆகிய 3 பேரும் ஒரு காரில் கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந் தேதி காரில், பெங்களூருவில் இருந்து சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண சென்றனர்.

அப்போது கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொன்னைகான்கொட்டாய் என்ற இடத்தில் கார் சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில், சம்பவ இடத்திலேயே நசீர் உசேன், ஜோயால்சொரூப் ஆகியோர் இறந்தனர். மேகாதிரிஷா படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, உயிர் பிழைத்தார். தற்போது நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

இந்த விபத்து குறித்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கின் இறுதி தீர்ப்பு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 88 லட்சத்து 54 ஆயிரம் இழப்பீட்டை 7.5 சதவீத வட்டியுடன், அரசு போக்குவரத்து கழகம் வழங்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதிக்குள் 25 சதவீத வட்டியுடன் இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து கழக நிர்வாகம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி இழப்பீட்டு தொகையில் ரூ. 33 லட்சத்து 83 ஆயிரத்தை மட்டும் நீதிமன்றத்தில் செலுத்தியது. மீதி தொகை செலுத்தப்படவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கலாவதி, இழப்பீட்டு தொகை முழுவதையும் செலுத்தாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டதுடன், இழப்பீட்டு தொகையாக இதுவரை உள்ள வட்டியுடன் சேர்த்து ரூ. 1 கோடியே 12 லட்சத்து 11 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோர்ட்டு அமீனா உதவியுடன், பாதிக்கப்பட்டவரின் வக்கீல் முருகன் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கு சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story