நாமக்கல்லில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்


நாமக்கல்லில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 13 July 2018 10:15 PM GMT (Updated: 13 July 2018 7:36 PM GMT)

நாமக்கல்லில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் நகராட்சி 17-வது வார்டிற்கு உட்பட்டது புதுகொளந்தான் தெரு. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை வழியாக நாள்தோறும் ஏராளமானோர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழுதடைந்ததால் தற்போது வரை குண்டும், குழியுமான சாலையாக உள்ளது. மேலும் ஆங்காங்கே சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து கிடப்பதை காண முடிகிறது. இதனை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது.

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்த சாலை பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நீண்ட காலமாக சாலை பழுதாகி இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது குப்பைகள் பறக்கிறது. இதன் காரணமாக சுவாச கோளாறு போன்ற உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் அபாய நிலையும் உள்ளது.

அதே போல் சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது கற்கள் பெயர்ந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது விழுந்து ஒரு சில வீடுகளின் கண்ணாடியும் உடைந்துவிட்டது. எனவே விரைவில் சாலையை சீரமைத்து தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story