ரூ.50 கோடி மதிப்புள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு - மீட்க அதிகாரிகள் நடவடிக்கை


ரூ.50 கோடி மதிப்புள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு - மீட்க அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 July 2018 5:00 AM IST (Updated: 14 July 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

ரூ.50 கோடி மதிப்புள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஏராளமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை கண்டறிந்து அவற்றை மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை வசூலாகாமல் இருந்த கோவில்களுக்கு சொந்தமான கடைகளின் வாடகையும் வசூல் செய்யப்படுகிறது.

இந்து அறநிலையத்துறை கோவை மண்டல பகுதி கோவில்களின் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தனி தாசில்தார் குமரேசன், திருப்பூர் மாவட்ட கோவில் நிலங்களுக்கான சப்-கலெக்டர் சபாபதி, அவினாசி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன், அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் (பொறுப்பு) நில அளவையாளர்கள் கோமதி, தீபா மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கெங்கு உள்ளது? அதற்கான ஆவணங்களை சேகரித்தனர். அப்போது வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைகுளம் அருகே ஏரிமேடு, நந்தவனம், காசிக்கவுண்டன்புதூர் செல்லும் வழியில் உள்ள கருணாலயசாமிமடம் உள்ளிட்ட பகுதிகளில் அவினாசிலிங்கேஸ் வரர் கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இவற்றின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த அறிக்கை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்த நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆய்வின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட் டது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் தொடர்பாக அந்த சர்வே எண்ணில் யாராவது சான்றிதழ் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் இதர துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Next Story